பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் உரை

அறிவாற்றல் மூலமாகவும், எடுத்துக் கூறி நிலைநிறுத்தியுள்ள பன்முகப்பட்ட கருத்துகளையும் போதனைகளையும், நெறி முறைகளையும், வாழ்க்கை முறைகளையும் வழிகாட்டுதல்களையும் பண்பாட்டு முறைகளையும் கொண்டதாக இந்து சமயம் திகழ்கிறது. பன்முகம் கொண்டதாயினும் அவற்றில் ஒருமைப்பாடும் இணைப்பும், தொடர்பும், பொதுத் தன்மையும் சிறப்புத் தன்மைகளும் கொண்டருப்பதையும் காண்கிறோம். பல கிளைகளையும் பல கோடி இலைகளையும், பல மலர்களையும் பல கனிகளையும் கொண்ட மகா விருட்சமாக இந்து சமயத்தைக் காண்கிறோம்.

இந்து சமயத்தின் பல பிரிவுகளும் பல வேறு கடவுளரையும் வலியுறுத்திய போதிலும் ஒரு கடவுட் கொள்கையை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளும் காணப்படுகின்றன. அத்துடன் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்னும் பொதுக்கருத்தும் திருமூலர் முதல் வள்ளலார் வரை கூறி வந்துள்ளனர்.

வள்ளுவப் பெருமான், “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்றும் வாலறிவன் என்றும், “மலர்மிசை ஏகினான் என்றும், “இறைவன்” என்றும், “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றும் தனக்குவமையில்லாதான் என்றும், ‘அறவாழி அந்தணன்’ என்றும் ‘எண்குணத்தான்’ என்றும் பொதுப்படையாக இறைவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம்.

கம்பனும் தனது இராமாவதாரக் காவியத்தின் முதலாவது காண்டத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலாக “உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று பொதுப்படையாகவே குறிப்பிடுகிறார். அதே சமயத்தில் யுத்த காண்டத்தில் :

“ஒன்றேயெனில் ஒன்றேயாம்
        பலவென்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்
        ஆம் என்னில் ஆமேயாகும்
இன்றே என்னின் இன்றேயாம்
        உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை

        நமக்கு இங்கு என்னோபிழைப்பு அம்மா!