பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைக்கலக்காதையில்

66


புறநகரின் பகுதியின் கண், கவுந்தியடிகளும், மாடல மறையோனும் கோவலன் கண்ணகியும் இருந்தபோது இசக்கி தெய்வத்திற்கு பால்சோறு படைக்க வந்த ஆயர் முதுமகள் மாதரியென்பாள் கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினாள். தென் பாண்டிய நாட்டில் இருக்கும் சமயம் சார்ந்த மக்களிடம் இசக்கி தெய்வதை வழிபடும் பழக்கம் இன்றும் இருந்து வருதைக் காண்கிறோம். அப்பழக்கம் அன்றும் இருந்ததைச் சிலப்பதிகாரக் காப்பியத்தால் அறிகிறோம். இவ்வாறான சிறிய செய்திகளையும் பல்வேறு மக்கள் பகுதியினரின் வழிபாட்டு முறைகளையும் மிகவும் நுட்பமாக அடிகளார் எடுத்துக்காட்டுகிறார். அத்துடன் ஆயர் குல மகளிரான மாதரி, இசக்கி தெய்வத்திற்கு பால் சோறிட்டு வழிபடுவதும், கண்ணனைப் போற்றி திருமாலைப்பாடுவதும், கவுந்தியடிகளை வணங்கி மறியாதை செய்வதுமான பரந்த சமய மனப்பான்மை, சாதாரண மக்களிடம் இருப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது.

"அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்

கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்"

எனக் காப்பிய வரிகள் கூறுகின்றன.

கவுந்தியடிகள் கண்ணகியை மாதரியிடம் அடைக்கலமாக அவளது இல்லத்தில் தங்கவைக்குமாறு கூறுகிறார்.

அப்போது சிறந்த அறிவுரைகளாகப் பத்தினிப் பெண்டிர் சிறப்பு பற்றியும், அடைக்கலப் பொருளைக் காக்கும் அறனைப் பற்றியும், தனக்கென வாழாத வாழ்க்கையின் குறைவிலா இன்பத்தைப் பற்றியும் உலக மக்களுக்கு வழிகாட்டி யாக உள்ள சிறந்த கருத்துக்களைச் சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் முன் வைக்கிறது.