பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

81


பொதிய மலைச் சந்தன மாலையும், கோர்க்கப்பட்ட கடல் முத்து மாலையும் இந்திரனுடைய பூணாகிய ஆரமும் பாண்டிய மன்னனின் மார்பில் விளங்குவன. இந்திரனையும் வென்று அவனுடைய பூணாரத்தைப் பூண்டு அப்பாண்டிய மன்னன் கோகுலத்தில் ஆனிரையை மேய்த்துக் குருத்த மரத்தினை முறித்த கண்ணன் என்று கூறுவார்கள் என்பதும்

பொன்மயமான இமயமலையின் உச்சியில் தன் புலிக் கொடியைப் பொறித்து இந்நில உலகை ஆள்பவன் வலுவான மதிலைக் கோட்டைப் பாதுகாப்புடைய புகார் நகரத்து வேந்தன் சோழன். அவரைப் போரில் வெல்வதற்குரிய சக்கரப் படையை உடைய திருமால் என்று கூறுவார்கள் எனவும்.

ஆழ்கடலில் புகுந்து அங்கு வலுவாக வேர் கொண்டிருந்த கடம்பு மரத்தை வெட்டியவன் வளம் மிக்க வஞ்சியிலே வாழும் சேர வேந்தனாகும். அவன்தான் மலை போன்ற தோள்களைச் செலுத்தி பாற்கடலைக் கடைந்த திருமாலாவான், என்றும், மூவேந்தர்களையும் திருமாலுக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளதும் இந்து சமயத்தின் மன்னராட்சி மரபைச் சேர்ந்ததாகும்.

இனி ஆய்ச்சியர் குரவையில் முன்னிலைப் பரவலாகவும், படர்க்கைப்பரவலாகவும் இளங்கோவடிகளார் இயற்றியுள்ள பாடல் வரிகளுக்கு ஈடு இணையே இல்லை. அத்தனைச் சிறப்புக் கொண்டதாக அப்பாடல்கள் அமைந்துள்ளன. திருமாலின் புகழ்பாடும் அப்பாடல் வரிகள் நமது உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பக்திச் சுவை நிரம்பிய இப்பாடல்கள் ஆய்ச்சியர் குரவைப் பாசுரங்களுக்கு சிகரம் வைத்தாற்போல் ஒளிமிக்கதாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் சிலப்பதிகாரக் காப்பியத்தின் தனிச்சிறப்பு மிக்க பாடல்களாகும்.