பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருமால் வழிபாடும் திருவிழாக்களும்

திருமால் வழிபாட்டைப்பற்றிச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளார். தமது காப்பியத்தில் பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். திருமால் வழிபாட்டு முறைகளில் இசை, நடனம், உற்சவங்கள், தீர்த்தங்கள், தீர்த்தாடனங்கள், பூசைகள், பொங்கல் விழாக்கள், தெப்ப விழாக்கள், தேர்த் திருவிழாக்கள் முதலியன முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. திருமால் கோயில்கள், பெருமாள் கோயில்கள் தமிழகத்தில் பல இடங்களிலும் முக்கியமாக நிலைபெற்றிருக்கின்றன. திருமால் கோயில்கள், பலதேவன் கோயில்களைப்பற்றிச் சிலப்பதிகாரக் காப்பியத்தில் பல இடங்களிலும் குறிப்புகள் உள்ளன. இவையெல்லாம் திருமால் வழிபாடு மக்களுடைய உள்ளங்களில் அக்காலத்தில் வலுவாகப் பதிந்து நிலைபெற்றிருந்ததையே காட்டுகின்றன. மிகவும் புகழ் பெற்ற வைணவத் திருத்தலங்களுள் திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருவனந்தபுரம் முதலியவைபற்றிய முக்கிய குறிப்புகளைச் சிலப்பதிகாரக் காப்பியத்தில் காண்கிறோம்.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் சிறப்பாக இடம் பெற்றுள்ள ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களுக்கு ஈடாகக் கருத்தாழமும் இசை, நடனக் கலைகளின் ஆடல் பாடல்களின் இணைப்பும் பக்திச்சுவையும் நிரம்பியிருக்கின்றன. அப்பாடல்களை ஆழ்வார்களின் பாசுரங்களைப் படிப்பதைப் போலவே படித்துப் படித்துப் பாடி ஆடி இன்புறலாம். ஆய்ச்சியர் குரவைப் பாடல்களைப் பாடினால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் துன்பங்களும் தீரும் என்றும், தங்கள் ஆடுமாடுகளுக்கும் கால்நடைகளுக்கும் ஏற்படும் நோய்கள்