பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

மரங்கள், தாவரங்கள், விலங்குகள், பறவையினங்கள், நீர்நிலைகள், மக்கள், அவர்களின் தொழில் பெருமைகள், விளைபொருள்களின் சிறப்புகள், அவர்கள் உண்டு மகிழ்ந்த உணவுப்பண்டங்கள், ஆடை ஆபரணங்கள், கல்வி, வேத சாத்திரங்களின் ஞானம், அறிவுச்செல்வம், மக்களின் ஒழுக்கம், மகிழ்ச்சியான வாழ்க்கை முறை, அந்த நிலப்பகுதிகளை ஆண்ட மன்னர்கள், அவர்களுடைய நல்லாட்சி, நீதி நிர்வாக முறைகள், அவர்களின் ஆலயத் திருப்பணிகள், கல்விப் பணிகள் முதலியவற்றையும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இவையெல்லாம் பொதுவாக இலக்கியங்களில் கானப்படும் வர்ணனைகள் மட்டுமல்ல. இவை உயிரோட்டமுள்ள இயற்கையின் இயக்கமும் மக்களின் செயல்பாடுகளும், இயற்கைச் சக்திகளின் அபூர்வமான காட்சிகளும் மாயா ஜாலங்களுமாகும். ஆழ்வார்களின் இந்தப் பிரபந்தப் பாடல்களில் சிறந்த மனிதாபிமான கருத்துகளையும், திருவிழாக்களில் திரண்டு வரும் பெரும் மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சி ஆரவாரங்களையும் காண்கிறோம்.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரக் காப்பியம் அடிப்படையில் சமண சமய இலக்கியச் சார்புடையது என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். சமண சமயத் துறவிகள், சாரணர்கள், மடங்கள் முதலியவற்றைக் காப்பியத்தில் நெடுகிலும் சந்திக்கிறோம். சமண சமய நிலைப்பாட்டில் கண்ணகி உறுதியாக உள்ள மனநிலையைக் காண்கிறோம். இதர சமயங்களிலும் வழிபாடுகளிலும் உள்ள சில மூடங்களை அவர் ஏற்காததைக் காண்கிறோம். வாழ்க்கையில் தாங்க முடியாத துன்ப துயரங்கள் ஏற்படும்போது அவற்றிலிருந்து விடுபடத் துறவு மேற்கொள்ளும் வழிமுறைகளையும் காண்கிறோம்.

அருகக் கடவுளும், அறப் பள்ளிகளும் சமணத் துறவிகளும் காப்பியம் முழுவதிலும் சிறப்பித்துக் கூறப்படுவதைக் காண்கிறோம். காப்பியத்தின் தலைசிறந்த பாத்திரம் காப்பியத் தலைவி கண்ணகி, சமண சமயப் பழக்க வழக்கங்களில், சிந்தனையில், நெறிமுறைகளில் உறுதியாக