பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 227

குடிபெயர்ந்து போகவேண்டிய அவசியம் இல்லாமல் . அத்தனை வளமுடனும் வசதிகளுடனும் வாழ்ந்தனர்.

புகார் நகரில், சகல கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கும் உயர்ந்தோர், சான்றோர் நிறைந்து இருந்தனர். அதனால் மக்களுக்கு நிலைபேறு இருந்தது. அங்கு போகமும் புகழும் நிறைந்திருந்தன என்று காப்பியம் குறிப்பிடுகிறது.

புகார் நகரில் செல்வம் மிகுந்திருந்தது. செல்வாக்கு மிக்க அரசரும் புகழ்ந்து போற்றும்படியான செல்வங்களை உடைய வணிகப் பெருமக்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். பெரும் அளவில் பண்டங்களும் மக்களுக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் சரக்குகளும் நிறைந்து குவிந்திருந்தன. கடல்வழியாகவும், தரைவழியாகவும் செல்வங்கள் வந்து நகரில் குவிந்துகொண்டிருந்தன.

மனித உழைப்பாலும் சமுதாய உழைப்பாலும் உற்பத்தியாகும் பண்டங்கள் உபரியாக மிகுந்து அதனால் பண்டமாற்றுதலும் வாணிபமும் பெருகியிருந்தன. அத்தகைய உபரிப் பெருக்கத்தையும் வாணிபச் சிறப்பையும் தமிழகம் பெற்றிருந்த ஆாலத்தைச் சிலப்பதிகாரக் காப்பியம் சிறப்பாகக் குறிப்பிடுகிறது.

அரங்கேற்றுக்காதையில் அன்று தமிழகத்தில் நிலவியிருந்த ஆடல் பாடல், இருவகைக் கூத்து, பலவகைக் கூத்து, பதினோர் ஆடல் வகை, பாட்டு, கொட்டு, தாளம், பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை ஆகிய வகைகளைப்பற்றியும், யாழ், குழல் ஆகியவைகளின் இசையுடன் தாளக் கூறுபாடு, வாய்ப்பாட்டு ஆகியவை பற்றியும் சிறப்பாக விவரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. இதில் இசையாசிரியர், பாடலாசிரியர் பயிற்சி முறைபற்றியெல்லாம் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் இசை பொதுவானது. அது இசைக் கருவிகளால் இசைக்கப்படுகின்றது. ஆனால், பாடல்கள் என்பவை மொழியின்பாற்பட்டவை. தமிழ்நாட்டின் பாடலாசிரியர் முத்தமிழும் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது மரபாகும்.