பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

நீண்ட நெடிய நெல்வயல்களுடன் வள்ளிக்கிழங்கு, பலா, மஞ்சள், இஞ்சி, வாழை, கரும்புத் தோட்டங்களும் நிறைந்திருந்தன.

மயில்களும், அன்னங்களும், பைங்கிளிகளும், சேவல் கோழிகளும், சம்பங்கோழிகளும், கானாங்கோழிகளும், நாரை, கொக்கு, நீர்க்காக்கை, உள்ளான், குளுவை, கணந்துட்புள், பெருநாரை முதலிய பல வகைப் பறவை இனங்களும் கயல்மீன், வாளை மீன், மலங்கு மீன், நண்டு, நத்தை முதலிய நீர்வாழ் உயிரினங்களும், ஆட்டுக் கிடாய்களும் எரினம் என்னும் கவரி மான்களும், நீர் நாய்கள், எருமைகள், பசுக்கள், நரிகள் முதலிய பல வகை விலங்குகளும் கால்நடைகளும் வழிநெடுகிலும் காணப்பட்டன என்று அடிகளார் விவரித்துக் கூறுகிறார்.

அடுத்த நீண்ட பயணமாக உறையூரிலிருந்து மதுரைக்கு அருகில் செல்லும்வரையிலும் பயணத்தில் கற்பாறைகள், சிறு மலைகள், ஏரிக்கரைகள், ஆழமான குளங்கள், சிறிய பொய்கைகள், ஊருணிகள், வயல்கள், பூஞ்சோலைகள் ஆங்காங்கு இடைப்பட்டன. வெண்கடம்பு, ஒமை, வாகை, மூங்கில், கள்ளி மரங்களும், இலவம், புன்க மரங்களும், வேங்கை, ஆச்சா, சந்தனம், அழிஞ்சில் மரங்களும், குரவம், கோங்கு பாதிரி, புன்னை மரங்களும் நிறைந்து காணப்பட்டன என்று அடிகளார் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

ஐவனம் என்னும் நெல், கரும்பு, தினை, வரகு, வெள்ளுள்ளி, மஞ்சள், வாழை, கமுகு, தெங்கு, மா, பலா முதலிய தோட்டங்களும், தோட்டப் பயிர்களும் நிறைந்து காணப்பட்டன. மான்கள், வண்டுகள், பன்றி, புலி, யானை, காட்டெருமை, கரடி, கலைமான், பாம்புகள் முதலியவை காணப்படும் காடுகளும், கிளி, காட்டுக்கோழி, மயில், கரிக்கோழி, கரிக்குருவி முதலிய பல வகைப் பறவையினங் களும் காணப்பட்டன என்று இளங்கோவடிகளார், இயற்கையின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறார். நமது பெரும்புலவர்களும் சான்றோர்களும் இயற்கை யோடிணைந்த மனித வாழ்வைப் போற்றி வளர்த்தனர்.