பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அண்டவெளியும், காற்றும் கடலும், மலைகளும் ஆறுகளுங் கூட மாசுபட்டிருக்கின்றன. அதனால் பெரும் அழிவு ஏற்படும் அபாயம் வந்துள்ளது.

பெரும்போர்கள், இயற்கைச் சீற்றங்கள் முதலியவற்றால் ஏற்படும் சேதங்களைக்காட்டிலும், இன்று இயற்கைச் சூழல்களுக்கு ஏற்பட்டுள்ள மாசு அதிகமான சேதங்களை உண்டாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இயற்கையோடிணைந்த மனிதன் வாழ்க்கையைப்பற்றிச் சிறப்பித்துப் பாடும் ஆழ்வார்களின் பாடல்களும், சிலப்பதிகாரப் பாடல்களும் நமக்கு மிகுந்த அறிவும் இன்பமும் தருவனவாகும்.

ஆழ்வார்கள் பாடியுள்ள திவ்ய தேசங்கள் பலவும் வயல்வெளிகளும், கழனிகளும், நீர்வளமும் நிலவளமும் நிறைந்த பூமியாகும். நெல்லும் கரும்பும் கமுகும் மா, பலா, வாழையும், தென்னையும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நிறைந்த வயல்வெளிகளும் தோப்புகளுமாகும். அத்துடன் சோலைமலை, திருவேங்கடமலை, இமயமலை முதலிய மலைக்கோயில்களும் பிரசித்தமானவை. அம்மலைகளின் இயற்கை அழகையும் அனுபவித்து ஆழ்வார்கள் பாடியுள்ளதைக் காண்கிறோம்.

இளங்கோவடிகளாரும் ஆழ்வார்களும் காட்டிய வழியில் இயற்கையைப் பேணி இயற்கைச் சக்திகளைக் காத்து இன்பமடைவோமாக