பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.43 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

தமிழ் கூறும் நல்லுலகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெருநில மன்னர்களாக நிலை பெற்றனர். வஞ்சி, பூம்புகார், உறையூர், மதுரை, கொற்கை முதலிய நகரங்களும், நகரங்களை மையமாகக் கொண்டு பல வேறு தொழில்களும் கடலோரத்துறைகளை மையமாகக்கொண்டு அயல்நாட்டு வாணிபமும் வளர்ச்சியடைந்தன.

தமிழகத்தின் சேர சோழ பாண்டிய நாடுகளின் நகரங்களின் வளர்ச்சியைப்பற்றி, அவைகளின் சிறப்புகளைப் பற்றி இளங்கோவடிகள் மிக விரிவாகவும் மிகவும் சிறப்பாகவும் எடுத்துக் கூறுகிற்ார். நகரங்களின் வளர்ச்சியை ஒட்டி, நகர மக்களின் வளர்ச்சியும் அவர்களின் தொழில்களும் ஆடல்பாடல்களும் இசைகளும் கூத்துகளும் கேளிக்கைகளும் விழாக்களும் வளர்ச்சி பெற்றிருந்ததையும் இளங்கோவடிகள் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

கோயில் கொண்ட நகரங்களையும் ஊர்களையும், அந்த திவ்ய தேசங்களின் சிறப்புகளையும்பற்றி ஆழ்வார்கள் மிக விரிவாகத் தங்கள் பாசுரங்களில் அழகுபடக் கூறுகிறார்கள். பல வேறு துறைகளிலும் மக்கள் நாகரிகமடைந்து, சிறப்படைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளதையும், பசி, பட்டினி, பிணி நீங்கி மக்களின் நல்வாழ்வு மேலும் மேம்பட வேண்டும் எனவும் பாடுகிறார்கள்.

பூம்புகார் நகரின் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய இருபகுதிகளைப்பற்றியும் இளங்கோவடிகள் மிக விரிவாகக் குறிப்பிடுகிறார். வீதிகள், மாளிகைகள், பல வேறு தொழில்கள் செய்யும் மக்கள், விற்பனை செய்யப்படும் பண்டங்கள், அவைகளை விற்பனை செய்யும் மக்கள், நகரின் பொருள் வளம், பொருள் பெருக்கம் ஆகியவைகளைப் பற்றியெல்லாம் மிகவும் சிறப்பாக விவரித்துக் கூறுகிறார்.

மாளிகைகள், அவைகளின் நிலா முற்றங்கள், பெரிய அணிகலன்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், அழகிய வட்ட வடிவமான சாளரங்களுடன் கூடிய மாடங்கள், யவனர் இருப்பிடங்கள் பலவும் விளங்கின என்று கூறுகிறார்.