பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

" இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின்

விரவுக்கொடி யடுக்கத்து நிரையத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் வெம்பரி யானை வேந்தற்கு ஓங்கிய கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞரும் தந்திர வினைஞரும் மண்டினி ஞாலம் ஆள்வோன் வாழ்கென"

என்று காப்பியக் கவிதை அடிகள் குறிப்பிடுகின்றன.

மன்னன் தனது பெரும்படையுடன் இரவின் இருளை ஒட்டும் மணி விளக்குகளின் ஒளியில் கொடிகள் ஆட, அமைச்சர் முதலான ஐம்பெருங்குழுவினரும் கரணத்தியலவர் முதலான எண்பேராயத்தினரும் வேகமாகச் செல்லும் யானைகளையுடைய மன்னனுக்கு மிகவும் அவசியமான சான்றோர்களும், காலத்தைக் கணிக்கும் கணிதரும், அரசியல் அறம் கூறுவோரும் தந்திரத் தொழிலோரும் மன்னன் நீடுழி வாழ்க என வாழ்த்திக்கொண்டு உடன் சென்றனர் என்பது பொருளாகும்.

இங்கு, பொதுவாக, அரசர்கள் படையெடுத்துச் செல்லும்போது எவ்வாறு செல்கிறார்கள் என்னும் பொதுச் செய்தியை நம்மால் அறியமுடிகிறது. ஐம்பெரும் குழுவினர், எண்பேராயத்தினர், சான்றோர், காலக்கணிதர், அரசியல் அறிஞர்கள், தந்திரத் தொழிலோர் முதலியோரும் அரசனுடன் நால்வகைப் படைகளுடன் சேர்ந்து செல்வது என்பது போர் முறையின் பகுதியாக இருப்பதை அறிய முடிகிறது. *

சேரன் செங்குட்டுவன் பல போர்களை நடத்தி வெற்றி பெற்றவன். ஆனால், இந்த வடபுலப் படையெடுப்பு அந்நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன் எடுத்த படையெடுப்பன்று. கண்ணகி சிலைக்குக் கல்லெடுக்கப் புறப்பட்ட வடபயணமேயாகும். ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் ஆட்சியுடனும் ஆட்சி நிர்வாகத்துடனும் இணைந்த ஆட்சி அமைப்பின் பகுதியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.