பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 77

சிறுவனுக்குக் கொடுத்துவிட்டான் என்றும் சிலப்பதிகாரச் செய்தி கூறுகிறது. இங்கு பாண்டிய நாட்டில் மறையவர்கள் திருந்திய முறையில் சீர்படத் தங்கள் தொழில்களைச் செய்து வந்ததை இளங்கோவடிகள் குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்.

பாரதி தமது பாஞ்சாலி சபதத்தில் “சிந்தையில் அறமுண்டாம் - எனிற் சேர்ந்திடும் கலிசெயும் மறமும் உண்டாம்” என்று குறிப்பிடும் அடிகளுக்குப் பொருள் விளக்கம் கூறும்போது, “ஒரு சங்கத்தின் - ஒரு ஜாதியின் - ஒரு தேசத்தின் - அறிவு மழுங்காதிருக்கும்வரை அதற்கு நாசமேற்படாது. பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாக மறை நூல்களிலே கானப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்க ளானால், மற்றக் குலத்தவர்களும் நெறி தவறியிருக்க மாட்டார்கள், மகர்பாரதப் போர் நடந்திருக்காது. பாரத தேசத்தில் பெரிய தோர் சத்திரிய நாசமும் கலியும் வந்திருக்கமாட்டா. ஒரு தேசத்தில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகளென மேலே குறித்திருப்பதை விளக்கும் பொருட்டு மகாபாரதப் போர் நடக்கும் முன்பாகவே முதற்படப் பாவம் பிராமணருக்குள் புகுந்ததென்பதை நூல் தெரிவிக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

இது ஒரு முக்கியமான - மிக முக்கியமான - கருத்தாகும். இக்கருத்து மிகவும் ஆழ்ந்து பரிசீலிக்கத்தக்கதாகும். இன்று அறிவுத்துறை என்பது நமது நாட்டில் பரவலாகியிருக்கிறது. யாரும் இது தங்களுக்கே உரியது என்று சொந்தம் பாராட்ட முடியாது. எனவே, அந்த அறிவுத்துறையே சமுதாயத்தின் சீரான வளர்ச்சிக்கும் செம்மையான நிலை நிற்பிற்கும் காரணமாகும் என்பதைச் சிலப்பதிகாரக் காப்பியத்திலும், திவ்யப்பிரபந்தப் பாசுரங்களிலும், பாரதியின் சிந்தனையிலும் வெளிப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதில் நமது பாரத தேசத்தின் சீரிய பண்பாட்டின் தொடர்ச்சியைக் காணலாம்.