பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அடுத்த பருவம் இல்லறம் இல்லறத்தார் கடமைகளுள் முக்கியமானது பொருள் சேர்த்தலாகும், அது ஊனமில்லாத பொருளாக இருக்க வேண்டும். தொழில் செய்யவேண்டும். அது தீமையற்ற தொழிலாக இருக்க வேண்டும். குழந்தைகளைப் பெற்று வளர்த்துப் பராமரித்து அவர்களை அறிவாளிகளாக்க உதவி செய்ய வேண்டும் முதியோர்களைப் பராமரிக்க வேண்டும். தனது குடும்பத்தைப் பேணவேண்டும். சமுதாயத்திற்கு உதவி செய்ய வேண்டும். தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுடன் பரஸ்பரம் துணையாக இருக்க வேண்டும். அரசுக்கு வரி செலுத்தி அரசும் ஆட்சி முறையும் செம்மையாக அமைய, நடைபெற உதவ வேண்டும்.

வள்ளுவப் பேராசான் அறத்துப்பாலில் இல்லறத்திற்கு முதலிடம் கொடுத்துள்ளார். "இல்வாழ்வான் என்பான், இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்று தொடங்கி, இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்களைப் பெறுதல், அன்புடைமை, விரும்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றியறிதல், நடுவு நிலைமை, அடக்க முடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, பொறையுடைமை, பொறாமை இல்லாமை, பிறருடைய பொருளை அபகரிக்கக் கருதாமை, புறம் கூறாமை, பயனில் சொல்லாமை, தீவினையச்சம் (தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல்), உலகிற்குப் பயன்படும்படி இருத்தல், ஈகை, புகழ் முதலிய பண்புகளெல்லாம் இல்லறத்தானுக்கு இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறார்.

இல்லறம் என்பது, இல்லத்தை, வீட்டை, குடும்பத்தை மையமாக வைத்து நடக்கும் அறமாகும், கடமையாகும். இந்திய சாத்திரங்களும் பாரம்பரியமும் நிலையான குடும்பத்தை அச்சாகக்கொண்ட சமுதாயத்தையே சமுதாய வாழ்வையே விளக்கிக் கூறுகிறது. இந்திய சமுதாயத்தில் குடும்பமே அடிப்படையான அடித்தளமான அங்கக் கூறாகும். அது சமுதாயத்தின் அச்சாணியைப் போன்றதாகும். இதை நமது நூல்கள் சாத்திரங்கள் அனைத்தும் வலியுறுத்திக் கூறுகின்றன.