பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அனைவரையும் அழைத்து, அவர்களைத் திரட்டி, அக்கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாரதி தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். செயலூக்கத்துடன் நாம் எதையும் செய்து முடிக்க முனைய வேண்டும், எதிர்நிலைக்கு இடம் கொடுத்துவிடலாகாது என்பது பாரதியின் கருத்தாகும்.

போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது, மோசடி, காமம், குடி பொய், களவு முதலிய தீய செயல்களுக்கு முடிவு கட்டி, மற்றவர்களுக்குத் தீமை விளையாத செயல்களில் ஈடுபடுவது தான் மனிதனுடைய சீரிய முயற்சியாகும் உலக நன்மைக்காகவும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகவும் கடவுளை வேண்டிக்கொள்வதும், வேள்விகள் செய்வதும், அவற்றிற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும், பாரத நாட்டின் மனிதாபிமான, அனைத்து உயிர்களின்மீதும் அன்பு கொண்ட ஒர் உயர்ந்த மேலான சிந்தனையாகும்.

அரங்கேற்று காதையில் மாதவியின் நடன அரங்கேற்றம் நடைபெறும்போது அதன் தொடக்கமாக உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலில்,

" சீர்இயல் பொலிய நீர்அல நீங்க

வாரம் இரண்டும் வரிசையில் பாட” என்று இளங்கோவடிகளார் குறிப்பிடுகிறார். நன்மைகள் பொலியவும் நன்மையல்லாதன நீங்கவும் கடவுளை வேண்டிப் பாடுவதாகக் குறிப்பிடுவது சிறப்பாகும்.

அதே போல, நாளங்காடி பூதத்தின் முன் மறக் குல மங்கையர் தெய்வம் ஏறப்பெற்று,

“பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்

பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி" எனப் பாடினர் என்று சிலப்பதிகாரச் செய்யுள் குறிக்கிறது. நாட்டில் பசியும் பிணியும் பகையும் நீங்கி மழையும் வளமும் கரந்து நாடு சிறப்புற அமைய வேண்டும் என்பது நமது விருப்பமாகும்.