பக்கம்:சிலம்பின் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. புகார்க் காண்டம்
1. திருமண வாழ்த்து
(மங்கல வாழ்த்துப் பாடல்)

புகார் நகர்

சோழநாடு காவிரி பாயும் வளமிக்க நாடு; அதன் தலைநகரம் உறந்தை எனப்படுவது; அதன் துறைமுகம் புகார் நகர் ஆகும். இதனைப் பூம்புகார் என்றனர். இது வணிகச் சிறப்புக் கொண்ட வளமான நகராக விளங்கியது.

இச் சோழநாட்டை ஆண்ட மன்னர்கள் வீரமும், கொடையும், நீதி வழுவா ஆட்சியும் கொண்டவராகத் திகழ்ந்தனர். திங்களைப் போன்று குளிர்ச்சியும், ஞாயிறு போன்று ஆட்சியும், மழையைப் போன்று கொடைச் சிறப்பும் உடையவராகத் திகழ்ந்தனர்.

இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை.


மாநாய்கன்

இப்பூம்புகார் நகரில் செல்வச் சிறப்பும், கொடைச் சிறப்பும் உடைய வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். மாநாய்கன் என்பான் அச் செல்வன்; வறியவர்க்கு ஈந்து வான்புகழ் நாட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/10&oldid=517079" இலிருந்து மீள்விக்கப்பட்டது