பக்கம்:சிலம்பின் கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைக்கலக் காதை

101



மலர்ந்த அம் முனிவன் “தொடர்ந்து அக்குரங்கைச் சொந்த மகன் போலப் போற்றி அதற்கு உணவிடுக” என்று கேட்டுக் கொண்டான்.

அக் குரங்கு வாழ்நாள் முழுவதும் அவ் வீட்டில் இருந்து பின் இறந்தது. இறந்தபிறகும் “அது நல் வாழ்வு பெறுக” என்று தானம் செய்தனர். அதன் விளைவால் அக் குரங்கு மத்திம நாட்டில் வாரணாசி என்னும் நகரத்து அரசன் உத்தரகெளத்தன் என்பானின் மகனாகப் பிறந்தது. அங்குப் பல காலம் வாழ்ந்து தானங்கள் பல செய்து பின் தேவர் உலகம் அடைந்தான். அவன்தான் இந்தக் குரங்குக் கையோடு கூடிய வானவன் என்று அங்கு வந்த சாவகர்க்குச் சாரணர் தலைவன் உணர்த்தினான். இந்தச் செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

வானவன் ஆகிய போதும் அந்த எட்டிச் சாயலன் மனைவி இட்ட தானத்தின் பயன் இது என்று காட்டக் குரங்கின் கைவிரலைத் தான் பெறுவதைச் சிறப்பாகக் கொண்டான். அந்த வடிவத்தோடு அங்கு வந்திருந்தான் என்ற செய்தியைச் சாவகர்க்கு எல்லாம் சமணமுனிவர் விளக்கினார்.

“சாரணர் கூறிய தகுதி மிக்க கதையைக் கேட்டவர்களும், தானம் இட்ட எட்டிச் சாயலனும், அவன் மனைவியும் விண்ணுலகப் பேரின்ப வாழ்வு பெற்றனர்” என்ற செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

“இந்தக்கதையைக் கேட்டாய்; அதனால் இதன் பயன் அறிகின்றாய். நீ இனி நீட்டித்து இராமல் இவர்களை அழைத்துச் செல்க” என்று கூறினார். அவளும் கண்ணகியை அழைத்துக் கொண்டு பொழுது சாயும் நேரத்தில் தம் வீட்டுக்குச் செல்ல முற்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/102&oldid=936416" இலிருந்து மீள்விக்கப்பட்டது