பக்கம்:சிலம்பின் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கல வாழ்த்துப் பாடல்

11



நிலைக்கேற்ப மிகவும் ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்தினர்.

ஊரவர்க்குச் செய்தி அறிவிப்பதிலேயே அவர்கள் செல்வச் சிறப்பு வெளிப்பட்டது. யானையின் பிடரியில் அழகிய மகளிரை அமர்வித்து வெண் கொற்றக் குடைகள் புடை சூழச் சங்கும் முழவும் அதிர ஊர்வலமாகச் செல்ல வைத்தனர். அந்த ஊர்வலத்தில் மங்கலத்தாலியும் வைக்கப்பட்டது. 'மாநகர்க்கு ஈந்தார் மணம்” என்று கூறுவர் கவிஞர்.

நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து மணம் நடத்துவது அக்கால வழக்கமாக இருந்தது. புரோகிதரை வைத்தே திருமணம் நடத்தினர். சித்திரை மாதம் சந்திரன் உரோகிணியை அடையும் நாள் நன்முகூர்த்தமாக நிச்சயிக்கப்பட்டது. பந்தலிட்டு மண மேடையை அலங்கரித்தனர். வைரத் தூண்கள் பந்தலைத் தாங்கின. நீலப் பட்டாடை விதானமாக அமைந்தது. பூக்களையும், முத்து மாலைகளையும் சரங்களாகத் தொங்கவிட்டனர். பூ இட்ட பந்தலில் முத்துகள் பதிக்கப் பெற்று இருந்தன.

மேடையில் கண்ணகியோடு கோவலன் அமர்ந்தான்; முன்னர் வேள்வித் தீ எழுப்பினர். மணமகன் மணமகளைக் கைப்பிடித்துத் தீயை வலம் வந்தான். அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு வலமாக வந்த காட்சி அங்கிருந்தவர் மனத்தை மகிழ்வித்தது. வியத்தகு காட்சியாகக் கொண்டனர்.

வாழ்த்துரை

அம் மண மண்டபத்தில் மங்கையர்கள் கலகலப்பாகச் செயல்பட்டனர். பூ அணிந்த மகளிர் பொலிவு ஊட்டினர். இளைய நங்கையர் அங்கு வளையச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் மேனிஅழகு கண்ணைக் கவர்ந்தது. ஒசிந்த நோக்கு அவர்கள் கசிந்த ஆர்வத்தைக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/12&oldid=958902" இலிருந்து மீள்விக்கப்பட்டது