பக்கம்:சிலம்பின் கதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் சூழ்வரி

121



எப்படித் தீர்க்க முடியும்? களையாத துன்பம் இக்காரிகைக்கு ஏற்பட்டது; வளையாத செங்கோல் வளைந்து விட்டது; தென்னவன் ஆட்சி சீர்குலைந்து விட்டது; இது என்ன அநீதி மண்குளிரச் செய்யும் அவன் வெண்குடை இன்று வெம்மை உற்றது ஏன்? அனல் கக்கியது என்?”

“சிலம்பு ஒன்று ஏந்தியவள் அவள் மானிடப்பெண் அல்லள் புதிய தெய்வம்; இவள் தெய்வம் உற்றவள் போல் துடித்துப் பேசுகின்றாள்” என்று பேசத் தொடங்கினர். மன்னன் ஆட்சி வீழ்ச்சியுற்றதற்கு வருந்தினர்; அஞ்சினர்; பெண் ஒருத்தி விடும் கண்ணிர் அவர்களைக் கலங்க வைத்தது.

ஊரவர் ஒன்று திரண்டனர்; அவர்கள் அவளுக்கு அவள் கணவன் விழுந்து கிடக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினர். பொற்கொடி போன்ற அந்தப் பூவையாள் அவனைக் கண்டாள்; அவன் அவளைக் காணவில்லை. கதிரவனும் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டான். மாலைநேரம், பூங்கொடியாள் பூசல் இட்டாள். அவள் தனித்த குரல் கனத்து ஒலித்தது. ஊர் எங்கும் அந்த அவலக் குரல் எதிர் ஒலித்தது.

காலையில் அவன் முடியில் அணிந்திருந்த பூவினை அவள் தன் கூந்தலில் சூடிக் கொண்டாள்; மாலையில் அப்பூவினை இழக்கும் அவலநிலைக்கு ஆளாயினாள். காலையில் அவன் அவளைத் தழுவினான்; மாலையில் அவன் குருதிபடிந்த மார்பைத் தழுவினாள். மாலை இருந்த மார்பு அது; இரத்தம் படிந்து மாலையாகக் காட்சி அளித்தது. தன்னை அவன் காணாத நிலை; அது அவளுக்குக் கடுந்துயரத்தைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/122&oldid=936439" இலிருந்து மீள்விக்கப்பட்டது