பக்கம்:சிலம்பின் கதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சிலம்பின் கதை



கண்ணகி அலறல்

“யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள்.

நகருக்குள் வந்தாள். “நான்மாடக்கூடல் மகளிர்களே! வானில் வாழும் தேவர்களே! தவசிகளே! கேளுங்கள். யான் போற்றும் காதலனுக்குக் கேடு சூழ்ந்த மன்னனையும், அந் நகரையும் சீறினேன்; யான் குற்றம் செய்யவில்லை; என் செயல் பழுது ஆகாது” என்று கூறினாள். தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து தன் முலையை வட்டித்து எறிந்தாள்.

எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது.

“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது.

பற்றிய நெருப்பு அந்த நகரை அழித்தது; பாண்டியன், அவன் தன் உரிமை மகளிர், அவன் மாளிகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/131&oldid=936450" இலிருந்து மீள்விக்கப்பட்டது