பக்கம்:சிலம்பின் கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

சிலம்பின் கதை



குவளை மலர் போன்ற கண்கள்; ஒளிபடைத்த முகத்தினள், கடைவாயில் பல் வளைந்து வெளிப்பட்டுத் தோன்றியது; பவள வாயள்; முத்துப் போன்ற பற்கள்; இடப்பக்கம் கருப்பு: வலப்புறம் சிவப்புப் பொன்னிறம் பெற்றிருந்தாள். உமைபாகன் வடிவம் அவளுடையது. இடக்கையில் தாமரைமலர் வலக்கையில் கொடுவாள்; வலக்காலில் வீரக்கழல், இடக்காலில் கால்சிலம்பு, பாண்டியனின் குல முதல்வி அவள். அவள் வருத்தத்துடன் கண்ணகி முன் நிற்க அஞ்சிப் பின் தொடர்ந்தாள்.

“நங்கையே! என் குறை கேட்பாயாக!” என்று அம் மங்கை விளித்துப் பேசினாள். வாட்டமுற்ற நங்கை கண்ணகி வலப்பக்கமாகத் திரும்பிக் “கோட்டமுற்றுக் கேட்ட நீ யார்? ஏன் என்பின் வருகிறாய்? என் துயரம் முழுதும் நீ அறிவாயோ!” என்று கேட்டாள்.

“துயரம் அறிந்தே உன்னைத் தொடர்கிறேன்; மதுரைப்பெண் யான், கட்டுரை கூற வந்திருக்கிறேன். உன் கணவனுக்காக இரங்குகின்றேன் என் அரசனுக்கு வந்தது தீ விதி; அது போல் உன் கணவனுக்கும் ஒரு தீ வினை வந்தது. இருவருக்கும் கேடுகள் நேர்ந்தன; அவர்கள் செய்த தீ வினைகளின் விளைவே இவை யாகும்.”

பொற்கைப் பாண்டியன்

“மறை ஒலி கேட்குமே யன்றி மணிநா அறை ஒலி இம் மதுரை நகரில் இதுவரை கேட்டது இல்லை. அடி தொழுது வணங்குவர் அல்லாமல், குடி பழித்துத் தூற்றுங் கொடுங்கோலனாகத் திகழ்ந்தது இல்லை. இளமை காரணமாகக் கட்டுக் கடங்காது மனத்தை அலையவிட்டவர் அல்லர் பாண்டியர்கள்; பாண்டி மன்னர்கள் தொடர்ந்து நன்மைகளைச் செய்து வந்தவர்கள்; ஒழுக்க உயர்வு மிக்க குடி அது”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/135&oldid=936454" இலிருந்து மீள்விக்கப்பட்டது