பக்கம்:சிலம்பின் கதை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சிலம்பின் கதை



கோவலன் கதை

“மற்றும் கோவலன் ஏன் காவலனால் வெட்டுண்டான்? அதற்கும் ஒரு காரணம் உள்ளது. சோலைகள் மிக்கது கலிங்க நாடு; அதைச் சார்ந்தவை சிங்கபுரம், கபிலபுரம் என்னும் நகர்கள் ஆகும். சிங்கபுரத்தை வசுவும், மற்றையதைக் குமரனும் ஆண்டு வந்தனர். இருவரும் ஒரு குலத்து மன்னர்; தாயபாகம் குறித்து முரண்பாடு ஏற்பட அது போராகக் கிளைத்தது: இருநாட்டவரும் பிரிந்து இயங்கினர்; போர் முனையாகிய இடைவெளிப் பரப்பு ஆறு காவதம் கொண்டது. கபிலபுரத்து ஊர்வாசி சங்கமன் என்பவன் பிழைப்பு நடத்தச் சிங்கபுரம் சென்று சிறுகடை ஒன்று வைத்தான். மாறுவேடம் ஆண்டு தன்னை மறைத்துக்கொண்டு அணிகலன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து கொண்டிருந்தான். அவனுடன் அவன் காதலியும் உடன் சென்றிருந்தாள்.

“சிங்கபுரத்து அரசு ஆட்சியைச் சார்ந்த பணியாளனாகக் கோவலன் பழைய பிறப்பில் அரச தொழில் செய்து கொண்டிருந்தான். 'ஒற்றன் இவன்' என்று சங்கமனைப் பற்றிக் கொணர்ந்து தண்டனைக்கு உள்ளாக்கினன் அதனால் அவன் கொலைக் களப்பட்டான். அதற்குக் காரணம் மதப்பற்றுதான். பரதன் என்ற பெயரோடு வாழ்ந்த கோவலன் கொல்லா விரதம் உடையவன். சங்கமன் அதில் விலக்குப் பெற்றவன் என்பதால் அவன்பால் வெறுப்புக் கொண்டு அவனைக் காட்டிக் கொடுத்தான். மதப்பற்று மனித நேயத்தைக் குலைத்தது; கொலைக்குக் காரணம் ஆகியது”

“கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்பாள் அழுது துடித்தாள் அரசன் முன்சென்று முறையிட்டாள். வணிகர்பால் தன் வழக்கை உரைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/139&oldid=936458" இலிருந்து மீள்விக்கப்பட்டது