பக்கம்:சிலம்பின் கதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரை காதை

139



ஊரவரை நோக்கி உரைசெய்தாள். சேரிகளில் சென்று தன் குறையைக் கூறினாள் அலறினாள் மன்றுகளிலும் தெருக் களிலும் சென்று கன்று எனக் கதறினாள். நாள்கள் பதினான்கு இவ்வாறு அலைந்து திரிந்தாள்; மனம் குலைந்து கணவனை அடையும் நாள் இது என இறுதியில் மலை ஒன்று ஏறி உயிர் விட்டாள். வானவர் நாட்டைத் தன் கணவனோடு சென்று அடைந்தாள்.”

“யாம் அடைந்த இந்தத் துயரததை இதற்குக் காரணமாக இருந்தோர் அடைவாராக” என்று சாபமிட்டு மறைந்தாள். அந்தச் சாபம்தான் இப்பொழுது வந்து சேர்ந்தது. அதன் விளைவுதான் இவ் இழப்புகள்” என்று கட்டுரை உரைத்தது மதுராபதி.

“முற்பிறப்பில் செய்த தீ வினைகள் வந்து உருத்தும் போது தவறு செய்தவர்கள் தப்ப முடியாது; அனுப வித்துத்தான் தீர வேண்டும். இதைப்போல் நீயும் நாள்கள் பதினான்கு கடந்தபின் கோவலனை வானோர் வடிவில் காண முடியும். மனித வடிவில் காண முடியாது” என்று மதுரை மாதெய்வம் மாபெரும் பத்தினியின் பழம்பிறப்புச் செய்திகளை எடுத்துக் கூறி அவளைத் தணிவித்தது. மதுரை நகர் எரியினின்று தப்பியது.

இறுதி அவலம்

கருத்துறக் கணவனைக் கண்டால் அல்லது நிற்பது இல்லை என்று கொற்றவை கோயில் வாயில் முன் தன் கைவளையல்களை உடைத்து எறிந்தாள். “கிழக்கில் கணவனோடு இந்நகருக்கு வந்தேன், மேற்குவழியாகத் தனியே வெளியேறுகின்றேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மதுரை விட்டு வெளியேறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/140&oldid=936459" இலிருந்து மீள்விக்கப்பட்டது