பக்கம்:சிலம்பின் கதை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சிலம்பின் கதை



உயர்ந்தவர் என்று கேட்டு வைத்தான். சேரமாதேவி நாகரிகமாக அதற்கு விடை நல்கினாள்.

“பாண்டிமா தேவிக்கு வானவர் சிறப்புச் செய்வர்; பாவை கண்ணகிக்கு நாம் சிறப்புச் செய்வோம். நம் நாட்டை அடைந்த பத்தினித் தெய்வத்துக்குக் கல் எடுத்துப் பரவுதல் செய்வோம்” என்றாள்.

சேரன் அருகிருந்த நூல்கள் கற்ற புலவர்களை நோக்கினான். அதற்கு அவர்கள், “இமயத்தில் இருந்து கல்லைக் கொணரலாம் அல்லது பொதிகை மலையில் இருந்தும் கொண்டு வரலாம். முன்னதைக் கங்கையில் நீர்ப்படுத்தலாம்; பின்னதைக் காவிரியில் நீர்ப்படுத்தலாம்” என்று அவர் தம் கருத்தினைத் தந்தனர்.

அதற்குச் சேரன் தன் பெருமை தோன்றக் கண்ணகிக்கு எங்கிருந்து கல் எடுப்பது தகுதி வாய்ந்தது என்பதைத் தக்க காரணம் தந்து கூறினான்.

“பொதிகையில் கல் எடுத்துக் காவிரியில் நீர்ப்படுத்தல் போதுமானது தான்; ஆனால் அது எளியவர் செய்வது; வலிமைமிக்கவர், புகழ்மிக்கவர், ஆற்றல் மிக்கவர் அதனை ஏற்று நடத்துவது தக்கது அன்று. வீர மன்னன் செய்யும் விவேகமான செயல் ஆகாது. இமயத்தினின்று கல் கொணர்தலே தக்கது ஆகும். வடநாட்டு வேந்தர் இடக்கு ஏதாவது செய்தால் அவரை ஒடுக்குவது தவிர வேறு வழியே இல்லை; தவம் மிக்க அந்தணர் முன் சடங்கின்படி கல்லைக் கண்ணியமாகத் தரவேண்டும்; மறுத்தால் அவர்களை ஒறுப்பது தவிர வேறு வழியே இல்லை. சரித்திரம் அவர்களுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்கும்; தமிழ்ப் போர்த்திணைகள் புறத்திணைகள் அவர்கள் அறியட்டும்; காஞ்சித்திணை என்பது நிலையாமையை உணர்த்துவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/149&oldid=936469" இலிருந்து மீள்விக்கப்பட்டது