பக்கம்:சிலம்பின் கதை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்கோள் காதை

153


டான் பிறநாட்டு அரசர்கள் திறை கொண்டு வந்து செலுத்த அவர்களை அழைக்கும் முரசு காலையில் ஒலித்தது. சிவனின் திருவடிகளை வணங்கிப் பின் யானை மீது ஏறினான். அதனை அடுத்துச் “செங்குட்டுவன் வெற்றி கொள்க” என்று வாழ்த்தி தெய்வப் பூ மாலை கொண்டு வந்து தந்தனர். அது திருவனந்தபுரத்து ஆடகமாடம் என்னும் திருமால் கோயிலினின்று கொண்டுவரப்பட்டது. சிவனை வணங்கிய தன் சிரசில் அதை ஏற்றுக் கொள்ளாமல் தோளில் தாங்கினான். அவன் போர்ப் பயணம் தொடங்கியது.

நாடக மடந்தையர் ஆடரங்கு எங்கும் அரசனுக்கு வாழ்த்துக் கூறினர்; “கொற்ற வேந்தே! நீ வெற்றி கொள்க! வாகைப் பூவும், தும்பைப் பூவும் சூடிப் பொலிவு பெறுக” என்று வாழ்த்தினர்.

“எங்கள் கண்களைக் கவரும் பேரழகு பெற் றிருக்கிறாய்! உன்னைக் கண்டு காதல் கொண்டு எம் வளையல்களை இழக்கின்றோம். இந்த நிலை என்றும் தொடர்க” என்றும் சிறப்பித்து அவர்கள் வாழ்த்துதல் தெரிவித்தனர்.

மற்றும் மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதர் எனப்பட்டவரும், “வெற்றி பெறுக” எனக் கூறி வாழ்த்தினர்.

யானை வீரரும், குதிரைத் தலைவரும், வாள் வீரரும் இவன் வாளாற்றலை ஏத்திப் புகழ்ந்தனர். அசுரரை அழிக்கச் சென்ற இந்திரனைப் போல் வஞ்சி நகரை விட்டு நீங்கித் தம் படைகளுடன் நீலகிரி மலையைச் சேர்ந்தான். அங்கே பாடி வீடு அமைத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/154&oldid=936474" இலிருந்து மீள்விக்கப்பட்டது