பக்கம்:சிலம்பின் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சிலம்பின் கதை



“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே தேனே” என்று அடுக்கிக் கொண்டே போகிறான். உலவாக் கட்டுரை பலவற்றைக் கூறுகிறான்.

கிடைத்தல் அருமைபற்றி “அருந்திறல் பாவாய்” என்கிறான். அவன் வாழ்வுக்கு அவள் இன்றியமையாதவள் என்பதால் “ஆருயிர் மருந்து” என்கிறான். “அலையிடைப் பிறவா அமுது”, “மலையிடைப் பிறவா மணி”, “யாழிடைப் பிறவா இசை” என்று அவள் அருமைகளைக் கூறுகிறான். அவள் வணிக மகள் என்பதில் பெருமை கொள்கிறான். 'குலமகள்' என்பதை அறிந்து அவளுக்கு அதனால் தனி மதிப்புத் தருகிறான். “பெருங்குடி வாணிகன் பெருமட மகளே” என்று அழைக்கிறான். செல்வக் குடியில் பிறந்த சிறப்பினைச் செப்புவதாக அக் கூற்று அமைகிறது. அவள் கூந்தலைத் தடவிக் கொடுக்கிறான். “தாழிருங் கூந்தல் தையால்” என்று விளிக்கிறான். தாழிருங் கூந்தல் விரிந்த கூந்தலாக மாறும் என்பதை அவன் எப்படி முன் கூட்டி உணர முடியும்!

அறவாழ்க்கை

தருக்குமிக்க வாழ்க்கை இன்பச் செருக்கோடு திகழ்கிறது. இவ்இன்ப வாழ்க்கை அவர்கள் அன்பினை மலரச் செய்யத் துணை செய்கிறது. அன்பும் அறனும் சேரும் போதே வாழ்க்கை பயன்மிக்கதாக மாறுகிறது; மலர்கிறது.

கோவலனின் தாய் ஆகிய அவ்வீட்டுப் பேரியல் கிழத்தி அவளைத் தனியே குடி வைத்து உரிமையுடன் வாழ வழி வகுத்தாள். அன்போடு அமைந்த அவ்வாழ்வு அறத்தோடு இயைந்து பண்பும் பயனும் கொண்டதாக முழுமை பெற்றது. சுற்றமும், அறவோர்களும், விருந்தினர்களும் அவள் வீடு தேடி வந்தனர். சுற்றம் சூழ இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/17&oldid=958908" இலிருந்து மீள்விக்கப்பட்டது