பக்கம்:சிலம்பின் கதை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துக் காதை

175



வாழ்த்துரைகள்

வஞ்சி மகளிர் வந்து கூடினர்; “தென்னவனைச் செஞ்சிலம்பால் வென்ற சேயிழையை நாம் பாடுவோம்; அப் பைந்தொடிப் பாவையைப் பாடுவோம்; வருக என்று அழைத்தனர். பாண்டியன் மகளாகிவிட்ட கண்ணகியை நாம் பாடுவோம்.” என்று அழைத்தனர்.

“சேரன் மகள் என்று நாம் அவளைச் செப்பினோம்; ஆனால் அவள் தன்னைப் பாண்டியன் மகள் என்று பேசுகிறாள். அவள் பாண்டியனை வாழ்த்தட்டும். நாம் சேரனை வாழ்த்துவோம்” என்று இவ்வஞ்சி நாட்டு இளம் பெண்கள் வாழ்த்தத் தொடங்கினர்.

அவர்கள் சோழனையும், பாண்டியனையும், சேரனையும் அவர்கள் சிறப்புகளைக் கூறி வாழ்த்தினர். “பழிதுடைப்பதற்காக உயிரைத் தந்தான் பாண்டியன்; பத்தினித் தெய்வத்துக்குப் படிமம் சமைக்க வடநாடு சென்றான் சேர அரசன் கண்ணகி பிறந்த நகர் புகார் நகர், அதன் அரசனாகிய சோழன் அந்நாட்டுக்கு அரசன், அதனால் அவனை வாழ்த்துவோம்” என்று மூவர் தம் சிறப்புகளைச் செப்பி வாழ்த்துக் கூறினர்.

சேர நாட்டு இளம் பெண்கள் சேர்ந்து பாடிய பாடல்கள் அக்கோயில் முன் முழங்கின. அம்மானைப் பாட்டில் சோழர் தம் சிறப்பையும், கந்துக வரியில் பாண்டியனின் பெருமையையும், ஊசல் வரியில் சேரனின் வெற்றிகளையும் சிறப்பித்துப் பாடினர். வள்ளைப் பாட்டில் மூவர்தம் உயர்வுகளையும் வரிசைப் படுத்திக் கூறினர்.

அம்மானைப் பாட்டு என்பது வினா ஒன்று தொடுத்து அதற்கு விடை தருவது போல அமைந்த பாடல் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/176&oldid=936497" இலிருந்து மீள்விக்கப்பட்டது