பக்கம்:சிலம்பின் கதை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

சிலம்பின் கதை



'திருவினாள் வடிவு' என்பதே இவள் தெய்வம் என்பதற்குத் தொடக்கமாக அமைகிறது.

வேட்டுவ வரியில் சாலினி என்பாள் 'உலகிற்கு ஓங்கிய திருமாமணி' என்ற தொடரில் இவள் தெய்வம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள்.

கவுந்தி அடிகள் 'கற்புடைத் தெய்வம்' என்ற தொடரில் மாதரிக்கு அறிமுகம் செய்கிறாள்.

'கற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்' என்று கூறக் காண்கிறோம். இவள் தெய்வம் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் உள்ளன என்று கோடிட்டுக் காட்டுகிறார்.

இடையர் சேரியில் மாதரி இவளைத் தெய்வக் காட்சியில் வைத்துக் காண்கிறாள்.

'தொழுனை ஆற்றினுள் தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக் கொல்'

என்று கூறி இவளை நப்பின்னையோடு உவமிக்கிறாள். இதுவும் தெய்வக் காட்சி என்று கொள்ளலாம்.

குன்றக் குறவர்கள் வேலனை வழிபட்டவர்கள்; இவளைத் தெய்வமாகக் கொள்கின்றனர்.

“இவள் போலும் நங் குலக்கு ஒர் இருந் தெய்வம் இல்லை”

என்று கூறி வழிபடுகின்றனர்.

மதுரையில் கண்ணகி ஆற்றாது அழுகின்றாள். அவளைக் கண்டு மதுரை மக்கள் இவளைப் 'புதிய தெய்வம்' என்று கூறக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/187&oldid=936508" இலிருந்து மீள்விக்கப்பட்டது