உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலம்பின் கதை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

சிலம்பின் கதை



தகைசான்ற சொல் காத்தது அதுதான் அவள் செயற்கு அரிய செயல் ஆகிறது. தன் கணவனுக்கு ஏற்பட்ட பழிச் சொல்லைப் போக்க அவள் சீறி எழுந்து வழக்கு ஆடுகிறாள்; அவனுக்கு ஏற்பட்ட பழியைப் போக்க அவள் செயல்படுகிறாள்; ஏன் மதுரையையே எரிக்கிறாள்.

மற்றைய மகளிரைப் போல் இணைந்து ஏங்கி அழாமல் ஊர் முழுவதும் தன் வழக்கை எடுத்துக் கூறுகிறாள்; அரசனிடம் சொல்லாடுகிறாள்; சோர்வு இல்லாமல் செயல்படுகிறாள். இது அவள் அடுத்த பண்பு ஆகிறது.

பொருள் இழந்து அவன் வாழ்ந்தபோது அவன் சோர்வைப் போக்கியவள் கண்ணகி. சிலம்பு உள என்று எடுத்துக் கொடுத்தவள்; அவள் துன்பம் கண்டு சோர்ந்தது இல்லை.

சிலம்பு உள கொள்ளும் என்று கூறும்போது நகைமுகம் காட்டுகிறாள். இடுக்கண் வருங்கால் அதனை ஏற்று நகையாடி ஏற்கும் இயல்பு அவளிடம் முழுவதும் காணப்படுகிறது.

“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்பு உள கொள்ளும்”

எனக் கூறுகிறாள். இது சோர்வின்மைக்கு எடுத்துக்காட்டு ஆகிறது.

வீட்டை விட்டு வெளியேறுகிறாள்; நடந்து களைப்பு அடைகிறாள்; 'மதுரை மூதூர் யாது?' என்று வினவுகிறாள். அப்பொழுதும் அவள் சோர்வு காட்டவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/193&oldid=936514" இலிருந்து மீள்விக்கப்பட்டது