பக்கம்:சிலம்பின் கதை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவலன்

205



ஊடற் கொள்கையில் இருந்த அவனை மகிழ்விக்க அவள் நகைகள் பல பூண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். கவர்ச்சியில் அவனை வைத்திருக்கிறாள் என்பது தெரிகிறது.

கண்ணகியை அவன் பாராட்டி இருக்கிறான்; அழகுக்காக முதலில்; அவள் குணத்துக்காகப் பின்பு; மாதவியை எந்த இடத்திலும் அவன் பாராட்டியதாகத் தெரியவில்லை. அவள் இடத்தில் அறிவைக் காண்கிறான்; அன்பை அவனால் காண முடியவில்லை. அந்த அறிவே பிணக்குக்கும் காரணமாகிறது. அவள் பாடல் கருத்துகளில் குறை காண்கிறான், அது ஊடலுக்குக் காரணம் ஆகிறது.

கோவலன் கதையே கண்ணகி மாதவி உறவு இவற்றில் அடங்கி விடுகிறது. என்றாலும் அவன் புற உலகில் நன்கு மதிக்கப்பட்டவன் என்று தெரிகிறது.

கவுந்தி அடிகள் அவன் தோற்றத்தைக் கண்டு அவன் அறிவும், உருவும், குலனும், உயர்பேர் ஒழுக்கமும், கடவுள் வழிபாட்டுச் சிந்தனையும் உடையவன் என்பதை அறிய

முடிகிறது.

'உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர்!'

என்று விளிக்கின்றார்.

இடைச்சியரிடம் கண்ணகி அவன் தெய்வ வழிபாட்டுச் சிந்தனை உடையவன் என்று எடுத்துக் கூறுகிறாள். 'சாவக நோன்பி' என்று அவனைப் பற்றிக் கூறுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/206&oldid=936528" இலிருந்து மீள்விக்கப்பட்டது