பக்கம்:சிலம்பின் கதை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிநலன்கள்

219



ஊதுகின்றன. இரு பொருள்பட இத்தொடர்கள் அமைந் திருத்தல் காண்க. இதனைச் சிலேடை அணி என்பர்.

நிரல் நிறை உவமை அணி

ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை உவமமாக வைத்து அவ்வாறு அவற்றிற்கு இணையாகப் பொருளை வைத்துக் கூறுதல் நிரல் நிறை அணி என்பர்.

இளவேனில் பருவத்தோடும், இளி என்னும் இசையைப் பாடும் வாயை உடைய வண்டினொடும் தென்றல் வீசுகிறது; இதற்கு உவமை பாணரோடும் நகரப் பரத்தரோடும் திரிதிரு கோவலன் கூறப்படுகிறான்.

“குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன் இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகு”

என்பார் கவிஞர்.

தற்குறிப்பேற்ற அணி

இயற்கை வேறு; மனிதன் வேறு உணர்வு அற்றது இயற்கை உணர்வு படைத்தவன் மனிதன். இன்ப துன்பங்கள் மனிதனை வாட்டும்; மலரச் செய்யும். இவை அஃறிணைப் பொருள்களுக்கு இல்லை.

கவிஞன் கற்பனை மிக்கவன். சுற்றியிருக்கும் சூழல் இவனுக்காக இரங்குவதுபோலக் கூறுவது கவிமரபு; இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

தான் கருதும் குறிப்பைத் தான் வருணிக்கும் செய்திகளில் ஏற்றிக் கூறுவது இவ் அணி என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/220&oldid=936543" இலிருந்து மீள்விக்கப்பட்டது