பக்கம்:சிலம்பின் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கானல் வரி

47


“கானல் வரிப்பாடலை யான் பாடினேன்; அதில் யான் எந்தக் குறிப்பையும் புகுத்தவில்லை; அவள் இவற்றை மாறாகக் கருதிக் குறிப்புத் தோன்றப் பாடிவிட்டாள்; பொய் பல கூட்டி உரைத்தாள் இவள்” என்று அவன் கருதினான்; அவளை வெறுத்தான். உறவை முறித்தான்.

இது என்ன அவ்வளவு பெரிய தவறா? இதற்காகவா இவன் அவளை வெறுப்பது? பிரிவது? உறவை அறுப்பது? என்ற வினா எழலாம். யாழிசை ஒரு பற்றுக் கோடாக வைத்து ஊழ்வினை அவள் வாழ்வினைப் பாழ்படுத்தியது என்றுதான் கூறமுடியும்.

பூரண நிலவு பொழியும் அவள் அழகிய முகம்; இனி அதை அவன் காணப் போவதில்லை; திங்கள் முகத்தாள்; அவளைக் கை நெகிழ்ந்து அகன்று விட்டான். அணைப்பு நீங்கியது; பிணைப்பு முறிந்தது.

“பொழுது ஆகிறது புறப்படுவோம்” என்று கூறி அவளை அழைக்க வேண்டியவன் அவ்வாறு கூறாமல் அவளைத் தனியேவிட்டு இவன் மட்டும் ஏவலாளர்கள் உடன்வர அவளைவிட்டு நீங்கினான்.

தோழியர் பேச வாய் எடுத்தனர். அவர்களைப் பேசாமல் தடுத்தாள். ஓசைபடாமல் எழுந்து பழையபடி வண்டியுள் புகுந்து வீடு வந்து சேர்ந்தாள். காதலனுடன் சென்றவள் திரும்பிய போது கையற்ற நெஞ்சோடு தனியளாய் வந்து சேர்ந்தாள். மற்றவர்களுக்கு அது ஏமாற்றத்தை அளித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/48&oldid=963749" இலிருந்து மீள்விக்கப்பட்டது