பக்கம்:சிலம்பின் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேனில் காதை

49


அறிந்து அருள்வீராக” என்று வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு வடித்து எழுதினாள். காதல் வயப்பட்ட அவள் மழலைச் சொல் போல் வார்த்தைகளை விட்டுவிட்டுக் கூறி எழுதி முடித்தாள். பசந்த மேனியை உடைய தன் தோழியாகிய வசந்த மாலையை வருக என்று அழைத்து அதனைத் தந்து அனுப்பினாள். இந்த முடங்கலில் சொல்லிய செய்திகளைக் கோவலனுக்கு அறிவித்து அவனை இருந்து அழைத்து வருக எனச் சொல்லி அனுப்பினாள்.

வசந்தமாலை அதனை எடுத்துச் சென்று கோவலனைக் கூல மறுகு ஆகிய கடைத்தெருவில் சந்தித்துத் தந்தாள்; அவன் அதை வாங்க மறுத்தான். மாதவியைப் பற்றிய பழைய நினைவுகள் அவன் மனக்கண் முன் வந்து மோதின.

கோவலன் மறுப்பு

அவள் செயல்கள் ஒவ்வொன்றும் நடிப்பே என்று கூறினான். அவளுக்கு வாழ்க்கையே நாட்டியக் கலையின் கூறுகள் என்று சுட்டிக் காட்டினான். தன்னோடு காதல் உரைகள் பேசியது ‘கண் கூடுவரி’ என்றான். அவள் செய்து கொண்ட ஒப்பனைகள் எல்லாம், ‘காண்வரிக் கோலம்’ என்றான். ஊடல் கொண்ட போது அடங்கியவளாய் ஏவல் மகளைப் போல் அடக்க ஒடுக்கமாகப் பணிந்து பேசியது ‘உள்வரியாடல்’ என்றான். தன்னைத் தணிவித்த பொழுது முதுகு புறம் வந்து அணைத்தது 'புன் புறவரி' என்றான். மற்றும் அவன் ஊடல் செய்கைகள் அனைத்தும் 'கிளர் வரிக்கோலம்' என்றான்; மேலும் ‘தேர்ச்சிவரி’ ‘காட்சிவரி’, ‘எடுத்துக் கோள்வரி’ என்று பெயர்கள் தந்து அவள் செயல்களை எல்லாம் நடிப்பு என்று கடிந்து கூறினான்.

அவள் ஆடல் மகள் ஆதலின் இவை எல்லாம் அவளுக்குக் கூடிவந்த கலைகள் என்று கூறிச் சாடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/50&oldid=963751" இலிருந்து மீள்விக்கப்பட்டது