பக்கம்:சிலம்பின் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனாத்திறம் உரைத்த காதை

53


செய்யாமல் விட்டு விட்டாய். அதனை இப்பொழுது நீக்குக. கடலொடு காவிரி கலக்கும் சங்கமத்துறையில் நெய்தல் மணக்கும் கானலில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் நீர்த்தடங்கள் உள்ளன. அந்நீர்த் துறைகளில் முழுகிக் காமவேள் ஆகிய மன்மதன் கோயில் சென்று தொழுதால் இந்த உலகத்தில் பெண்கள் கணவனோடு இன்புற்று வாழ்வர்; அடுத்த பிறவியிலும் இருவரும் போகம் செய் பொன்னுலகில் சென்று பிறப்பர். நாம் இருவரும் சென்று நீராடுவோம்” என்று கூறினாள்.

அவள் உரைத்த உரைகள் அனைத்தும் செவி கொடுத்துக் கேட்ட கண்ணகி ஒரே சொல்லில் தக்க விடை தந்து அவள் வாயை அடக்கினாள். “பீடு அன்று” என்று கூறி அவளை அனுப்பி வைத்தாள்.

அதன்பின் ஏவற்பெண் ஒருத்தி யாரோ வருகிறார்கள் என்பது அறிந்து கடைத்தலை சென்று பார்த்தாள். வந்தவன் காவலன் என்று குறிப்பிட்டாள். அந்த வீட்டுத் தலைவன் என்பதை அறிவித்தாள்.

கோவலனும் நேரே வந்து அவள் பெருமைமிக்க பள்ளியறைக்குச் சென்று அவளைப் பார்த்தான்; வாடிய மேனிகண்டு வருத்தம் அடைந்தான்; அவன் அவளோடு உரையாடிய சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருந்தன. “வஞ்சனை மிக்க ஒருத்தியின் வலையில் அகப்பட்டுக் குலம் தந்த செல்வத்தை எல்லாம் தொலைத்து விட்டேன். குன்று போன்ற செல்வம் அது குன்றி விட்டது; இப்பொழுது வறுமை வந்து உள்ளது. இலம்பாடு அது எனக்கு நாணத்தைத் தருகிறது” என்று அவளிடம் தன் மனநிலையைத் தெரிவித்தான்; செறிவு மிக்க சொற்களைக் கேட்டு அறிவு மிக்க கண்ணகி நலம்திகழ் முறுவல் நகைமுகம் காட்டிச் “சிலம்பு உள கொள்க” என்றாள். இச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/54&oldid=963756" இலிருந்து மீள்விக்கப்பட்டது