பக்கம்:சிலம்பின் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சிலம்பின் கதை


புதுப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். அம்மகிழ்வுப் பாடல்கள் கேட்போரை மயங்க வைத்தன. இந்தப் புதுமை கண்டு அவர்கள் புதுமகிழ்வு கண்டனர்.

உழுகின்ற கலப்பைக்குப் பூக்கள் சூட்டி வழிபட்டுப் பின் அதனைக் கொண்டு நிலத்தை உழுதனர்; அவர்கள் எக்களிப்புக் கொண்டு பாடிய பாடல் ‘ஏர் மங்கலம்’ எனப்பட்டது. அரிந்து குவித்துக் கடாவினைவிட்டு அதரி திரித்து நெல்லை முறம் கொண்டு தூற்றியபோது பாடிய பாட்டு ‘முகவைப் பாட்டு’ எனப்பட்டது. கிணைப் பொருநர் முழவு கொண்டு எழுப்பியது ‘கிணை இசை’ எனப்பட்டது. இம்மூவகைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வழிநடை வருத்தம் தெரியாமல் நடந்து சென்றனர்.

வழியில் பல ஊர்களைக் கடந்து சென்றனர். மறையவர்கள் வேள்விகள் எழுப்பிய புகை, உழவர்கள் கரும்பு ஆலைகளில் மூட்டிய தீயில் தோன்றிய புகை வானத்தை மூடின; அவை மலை தவழும் மேகம் எனக் கவிழ்ந்திருந்தன; இத்தகைய அந்தணர்கள் இருக்கைகளும், உழவர்கள் இல்லங்களும் உடைய ஊர்கள் பலவற்றைக் கடந்து சென்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு கர்வதமே அவர்களால் கடக்க முடிந்தது. அங்கங்கே இருள் கவ்வும் நேரங்களில் சோலைகளில் தங்கி ஓய்வு பெற்றனர்; களைப்பு ஆறினர்.

ஊர்கள் பல கடந்தவர் திருவரங்கத்தை அடுத்த ஒரு சோலையில் தங்கினர். அங்கே உலக நோன்பிகள் இட்ட சிலாதலம் ஒன்று இருந்தது; பட்டினப்பாக்கத்து உயர்குடி மக்கள் அமைத்த சிலாதலம் அதுவாகும். அங்கே அறிவும், ஞானமும் மிக்க சமணர் தலைவர்கள் வந்து தங்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/61&oldid=964037" இலிருந்து மீள்விக்கப்பட்டது