பக்கம்:சிலம்பின் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சிலம்பின் கதை


வசித்து வருபவன், தென்னவன் நாட்டின் தீது தீர் சிறப்பை நேரில் கண்டு வருகிறேன்; அதனால்தான் அவனை வாழ்த்திக் கொண்டு வருகிறேன்; இதுவே என் வருகை” என்று அவ் அந்தணன் உரைத்தான். தேசங்கள் பல கண்ட அவனிடம் கோவலன் நேசம் பாராட்டினான்.

“மாமறை முதல்வனே! மதுரைக்குச் செல்லும் நெறியாது? அதனைக் கூறுக” என்று கோவலன் கேட்க அவன் வழித்திறத்தைத் தன் நாவன்மை தோன்றக் கூறினான்.

மூன்று வழிகள்

“நீங்கள் இந்தக் கடும் வெய்யிலில் காரிகை இவளுடன் புறப்பட்டு வந்துளளீர் குறிஞ்சியும் முல்லையும் தம் நல்லியல்பு திரிந்து பாலை என்று இந்நிலப் பகுதிகள் வடிவம் கொண்டுள்ளன. இந்த நெடுவழியைக் கடந்து சென்றால் கொடும்பாளூர் என்னும் ஊரில் நெடுங்குளம் ஒன்று வரும்; அங்குச் சிவன் ஏந்தி நிற்கும் சூலத்தைப் போல அதன் கரையில் மூன்று வழிகள் கிளைக்கின்றன.

வலது புறம்

இதன் வலப் பக்கம் சென்றால் மராம், ஒமை, உழிஞ்சில், மூங்கில், காய்ந்து கிடக்கும் மரம் முதலியன உள்ள காடு உள்ளது. நீர் வேட்கையால் மான்கள் கூவி விளிக்கும் காட்டையும், எயினர் குடியிருப்பையும் கடந்தால் ஐவனம் என்னும் நெல்லும், கரும்பும், தினையும், வரகும், வெள்ளுப்பும், மஞ்சளும், கவலைக் கொடியும், வாழை, கமுகு, தெங்கு, மா, பலாவும் சூழ்ந்த தென்னவன் சிறுமலை தோன்றும். அம்மலையை வலமாகக் கொண்டு சென்றால் மதுரையம்பதியை அடையலாம்” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/67&oldid=964043" இலிருந்து மீள்விக்கப்பட்டது