பக்கம்:சிலம்பின் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறஞ்சேரி இறுத்த காதை

79


அலறும்; கரடி கத்தும். இவற்றைக் கண்டு அஞ்சாது என்னுடன் வருக” எனக் கோவலன் கூறினான். அவள் அவன் தோளில் கையைச் சார்த்திய வண்ணம் பின் தொடர்ந்தாள். கவுந்தி அடிகள் அறவுரைகள் பேசிக் கொண்டே வர வழிநடைவருத்தம் தோன்றாமல் இருவரும் நடந்து சென்றனர். பேச்சுத்துணை அவர்களுக்குப் பெரிதும் உதவியது.

கோசிகன் சந்திப்பு

இரவுப் பொழுது நீங்கியது; காட்டுக் கோழி கத்தியது; பொழுது விடிந்தது. அந்தணர் உறையும் பகுதியைச் சேர்ந்தனர். கண்ணகியைக் கவுந்தியடிகள்பால் விட்டு விட்டுக் கோவலன் தனியே நீங்கினான். தான் தங்கியிருந்த வீட்டின் முள்வேலியை விட்டு நீங்கி நீர் கொண்டுவர ஒரு பொய்கை நோக்கிச் சென்றான். சற்றுத் தொலைவில் கோசிகன் என்னும் அந்தணன் இவனை விடியற்பொழுதில் கம்மிய இருளில் கண்ணுற்றான். அவன் அடியோடு மாறிப் போயிருந்தான். காதலி தன்னோடு கடுவழி வந்ததால் அவன் கறுத்து விட்டான். அவனால் அடையாளமே கண்டு கொள்ள இயலவில்லை. இவன்தான் கோவலன் என்பதை அவனால் உறுதி செய்ய முடியவில்லை; அதற்காக அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.

அங்கே மாதவிக் கொடி ஒன்று வெய்யிலுக்கு வாடிக் கிடந்தது; “இந்த வேனிலுக்கு நீ வாடிக் கிடக்கின்றாய். நீயும் கோவலன் பிரிய அதனால் வருந்தி இளைத்து வாடிய மாதவிபோல் வாட்டமுற்றிருக்கிறாயோ” என்று பேச்சுக் கொடுத்துத் தனி மொழி பேசினான். இலை வேயப்பட்ட பந்தலிடை நின்று அவன் பேசினான். இந்தக் கோசிகமாணி இவ்வாறு கூறக் கேட்ட கோவலன், “நீ கூறியது யாது?” எனக் கேட்க அவன்தான் இவன் என்று தெரிந்தவனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/80&oldid=964871" இலிருந்து மீள்விக்கப்பட்டது