பக்கம்:சிலம்பின் கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சிலம்பின் கதை



எனவே மதுரை மிகவும் அணித்து உள்ளது” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். “அந்த அழகிய ஊருக்குத் தனித்துச் சென்றாலும் அச்சம் இல்லை; தடுப்பவர் யாரும் இல்லை, மடுத்துச் செல்லலாம்” என்று கூறக் கோவலன் மற்றைய இருவரோடு முன்போலவே இரவில் பயணம் செய்து விடியற் காலையில் மதுரையை அடைந்தான்.

மதுரையை அடைதல்

அங்கே அவர்கள் முதலில் கேட்டது சிவன் கோயிலின் முரசு; அதனோடு சேர்ந்து அவர்கள் கேட்டது அரசன் கோயிலின் காலைமுரசு மற்றும் அங்கே மறையவர் வேதம் ஒதினர்; மாதவர் மந்திரம் கூறினர். இவையும் செவியில் வந்து விழுந்தன.

படை வீரர்கள் அணி வகுத்து வகை செய்யும் போது எழுப்பிய ஒசை, போர்களில் பிடிபட்ட யானைகள் முழக்கம், காடுகளினின்று பிணித்து இழுத்துவரப்பட்ட களிறுகளின் கதறல், வரிசைப் படுத்தப்பட்ட குதிரைகள் கனைக்கும் குரல் ஒசை, கிணைப் பொருநர் பாடிய வைகறைப் பாடல் ஒசை, கடல் எழுப்பும் முழக்கம் போல் வந்து இவர்களை வரவேற்றன. அவர்கள் துன்பமெல்லாம் நீங்கி நகர்வந்து சேர்ந்துவிட்டோம் என்பதில் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.

அங்குப் பசுமை மிக்க சோலைகள் இவர்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தன. குரவம், வகுளம், கோங்கம், வேங்கை, மரவம், நாகம், திலகம், மருதம், சேடல், செருந்தி, செண்பகம், பாடலம் முதலிய பன்மலர் விரிந்து அழகு தந்தன. மற்றும் குருகு, தளவம், முசுண்டை, அதிரல், கூதாளம், குடகம், வெதிரம், பகன்றை, பிடவம், மயிலை முதலியன பின்னிப் பிணைந்து வைகை நதிக்கு அமைந்த மேகலைபோல் காட்சி அளித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/83&oldid=936396" இலிருந்து மீள்விக்கப்பட்டது