பக்கம்:சிலம்பின் கதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சிலம்பின் கதை



தீமைபயக்கும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் பொழுது உறுதி குலைகின்றனர். தளர்ச்சி அடைகின்றனர்.”

“கற்று அறிந்தவர்கள் கலங்குவது இல்லை. அவை வினைப்பயன் என்று விவேகம் காட்டுவர்; துறவிகளுக்குத் துயர் என்பதே இல்லை; மாதரைக் காதலித்து மாதுயர் அடைவோரே இவ்வுலகில் மிகுதியாவர்; அவர்களுக்கே இன்பதுன்பங்கள் மாறி மாறி வருகின்றன. மன்மதன் அவர்களை வாட்டுவான். அவர்கள் அதனால் வாழ்க்கை யில் வாட்டம் அடைகின்றவர்; அது இன்று மட்டும் அல்ல; இது மானிட வரலாறு ஆகும். எடுத்துக் காட்டுகள் நம் நாட்டு ஏடுகள் எடுத்துக் காட்டியுள்ளன. தெய்வங்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.

“பிரமனைப் படைத்த பரமன் இராமன் அவனுக்கே இந்த நிலை எற்பட்டது; தந்தை இட்ட கட்டளை: அவனுக்கு அவன் மனைவி ஒரு கால் தளை, அவளோடு கானகம் அடைந்தான். அவன் பட்ட துயரம் இந்த உலகம் அறிந்தது.”

“ஏன்? நளன் கதை எடுத்துக் கொள்; பிணக்கு என்பதே அறியாத காதலுக்கு அவர்கள் சிறந்த எடுத்துக் காட்டு. அவர்கள் ஏன் பிரிந்தார்கள்? காதலியைக் கானகத்தே காரிருளில் விட்டுப் பிரிந்தான். விதி அவர்களுக்குச் செய்த சதி, அதனால் நேர்ந்தது அந்தக் கதி”

“இவர்களை நோக்க உன் வாழ்க்கை சீர்மை கொண்டது. மனைவி உன்னை விட்டுப் பிரியவில்லை. கிழிந்த கந்தல் வாழ்க்கை தான். ஒட்டுப் போட்டால் சரியாகி விடும்; உங்கள் காதல் வாழ்க்கை சோகம் அடைந்திலது. நீ ஏதம் கொள்வது வீண்” என்று சான்றுகள் காட்டி அவனுக்கு ஆறுதல் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/87&oldid=936400" இலிருந்து மீள்விக்கப்பட்டது