பக்கம்:சிலம்புநெறி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்பு நெறி ☐ 21

 கொல்லப்பட்டதை மறக்க இயலுமா? இந்த நாட்டில் நீதி நூல்களுக்குப் பஞ்சமா? இதிகாச புராணங்களுக்குத்தான் பஞ்சமா? மேடைகளுக்குத்தான் பஞ்சமா? அல்லது உபதேசங்களுக்குத்தான் பஞ்சமா?

உலகிலேயே இந்தியாவில்தான் புராணங்கள் அதிகம்; உபதேசியார்கள் அதிகம்! ஆனால் நிலைமை என்ன? மதிப்புணர்ச்சியுடன் போற்றப்பட வேண்டிய பல்கலைக் கழகங்கள் கூடப் போராட்டக் களங்களாகத் தான் மாறி உள்ளன. போராட்டத்திற்குரிய நியாயங்கள் உண்டா? இல்லையா? என்பதல்ல கேள்வி.

உரிமைகளை அடைய அணுகும் முறைகளைப் பற்றித்தான் நமது கவலை! போராடுபவர்கள் மீது மட்டும் குறையில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் போராடினால்தான் பணிகிறார்களே தவிர, நியாயங்களைக் காலத்தில் ஆராய்ந்தறிய முன்வருவதில்லை.

இம் மனப்போக்கு, அநியாயங்களைத் தூபமிட்டு வளர்க்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் மனம் வைத்தால் எளிதில் தீர்க்கலாம்; தீர்த்துக் கொள்ளமுடியும். ஆயினும் மனம் வரவில்லை. ஏன்? மக்கள் உணர்ச்சியை விட, மாக்கள் உணர்ச்சியே மேலிட்டிருக்கிறது. சராசரி மனிதனிடத்திலிருந்து மிகப் பெரிய இடம் வரையில் ஒரே நிலைதான்!

தீண்டாமை குற்றம், தீண்டாதார் என்று ஒதுக்குதல் கூடாது. சாதி வேற்றுமை தீது. சாதி வேற்றுமைகளை அறவே விலக்க வேண்டும். “எல்லோரும் ஓர் குலம்” என்ற கருத்து. சங்க காலத்திலிருந்து இலக்கியங்களில் ஒரே மாதிரியாக உரத்த குரலில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. யாராவது கேட்டார்களா? பின்பற்றினார்களா? படித்ததில் என்ன குறைவா? உரைகள் எழுதி அச்சிடவில்லையா? பட்டி மன்றங்களில் பேசி மகிழவில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/23&oldid=1375873" இலிருந்து மீள்விக்கப்பட்டது