பக்கம்:சிலம்புநெறி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அன்று கண்ணகியின் வினாவிற்கு விடை கிடைக்கவில்லை. அதே வினாவை இன்றும் பலர் கேட்கின்றனர். விடைதான் கிடைத்த பாடில்லை! என்று தான் கிடைக்குமோ...?

தெய்வமும் உண்டு கொல்!

“தெய்வம்” என்பது நியதிகளின் மறு பெயர். நீதியின் வடிவம் தெய்வம் எந்த நாட்டில் தெய்வ நம்பிக்கை இருக்கிறதோ அந்த நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப் பெறும்; இயற்கை நியதிகள் பாராட்டப் பெறும்; நீதி நெறிகள் பாராட்டப் பெறும்.

“வல்லாண்மை வாழும்” என்ற நியதி உண்மையேயானாலும், தமிழிலக்கிய உலகு இந்நியதிக்குத் தரும் பொருள் வேறு. வல்லாண்மை என்பது எளியனவற்றை அழித்து வென்று வாழ்தலன்று.

இவ்வகைப் போராட்டங்கள் மனித குலத்துக்குத் தனியுடைமை உணர்வு வ ந் த காலந்தொட்டுத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆயினும் மனித குலம் அடைந்த பயன் இழப்புகள்தான்! ஆனால், தமிழிலக்கிய உலகம் “வல்லாண்மை” என்பதற்கு, கொள்ளும் பொருள் வேறு.

இயற்கையின் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, வெளி, ஆகியனவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைத் தாங்கி, உயிர்த் தொகுதிகளுக்கிடையிலுள்ள நச்சுயிர்களினின்றும் தப்பி, ஆற்றல் மிக்க உழைப்பால், நுகர்வன படைத்து உள்ளவாறு நுகர்ந்து இன்பந் துய்த்து வாழும் வாழ்க்கையே வல்லாண்மையின் வெற்றி. ஆனால், நடைமுறையில் கொள்ளும் பொருள் வேறு .

வாழும் உயிர்களிடையில் நுகர்பொருள் தேவைக்கு அதிகமாக இல்லை; பற்றாக்குறை நிலைதான். அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/32&oldid=1383821" இலிருந்து மீள்விக்கப்பட்டது