பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

என்றார்கள். அமைச்சர்களும் அதைக் கேட்டு, நல்லது தான் என்று சொன்னார்கள். குடிமக்களும் அந்தச் செய்தியைக் கேட்டுக் களிப்படைந்தார்கள்.

ஒரு நல்ல நாளில் பலரும் சூழ மிகச் சிறப்பாகச் செங்குட்டுவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான் நெடுஞ்சேரலாதன். அதே சமயத்தில் அவனுடைய தம்பியாகிய இளங்கோவுக்குப் பெருநம்பி என்ற பட்டம் கொடுத்து, அதற்கு ஏற்ற அடையாளங்களாகிய, பொற்பூ முதலியவற்றை வழங்கினான். அரசியலில் மிகச் சிறந்த அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் நம்பி என்றும் பெருநம்பி என்றும் சிறப்புப் பெயர்களை வழங்குவது அக்கால அரசர்களின் வழக்கம். இளங்கோ அன்று முதல் பெருநம்பி இளங்கோ என்று, பட்டப் பெயருடன் யாவரும் அழைக்கும் நிலையைப் பெற்றார்.

இளங்கோவுக்குத் தமிழ் நாடு முழுவதும் சென்று அங்கங்கே உள்ள காட்சிகளைக் கண்டு களித்து வரவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. பெரிய நகரங்களையும் சிற்றூர்களையும் கண்டு மகிழ வேண்டும் என்று விரும்பினர். பாண்டிய மன்னனையும் சோழ மன்னனையும் கண்டு அவர்கள் நாட்டிலுள்ள ஆறுகளையும் மலைகளையும் வழிபாட்டிடங்களையும் காணும் விருப்பமும் அவருக்கு எழுந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு உண்டான பெரிய விருப்பம் ஒன்று உண்டு. மதுரைமா நகரத்தில் பாண்டிய மன்னன் தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தி வந்தான். அதில் பல பெரும் புலவர்கள் இருந்து நல்ல நூல்களை இயற்றி வந்தார்கள். கல்வியிற் சிறந்து நின்ற இளங்கோவுக்கு