பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தைப் பார்த்து உள்ளத்தைப் பறிகொடுத்தார். காவிரிப்பூம்பட்டினம் போனார். அந்த நகரத்தின் அமைப்பையும் அரண்மனையையும் மாளிகைகளையும் கண்டு மகிழ்ந்தார். ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்தார். அரசர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற மன்னர்களோடு போர் செய்து வென்றதற்கு அறிகுறியாகப் பல வெற்றிச் சின்னங்களை எழுப்பியிருப்பார்கள். கரிகால சோழன் அவ்வாறு பெற்ற வெற்றிகளுக்கு அடையாளமாகப் பல அமைப்புக்கள் அங்கே இருந்தன. அவற்றையெல்லாம் கண்டார். அவை அங்கே இருப்பதற்குக் காரணம் இன்னது என்று விசாரித்து அறிந்தார். இவ்வாறு கண்டும் கேட்டும் பல புதிய வரலாறுகளையும் உண்மைகளையும் அவர் தெரிந்துகொண்டார். பல இடங்களுக்குப் பயணம் செய்வதனால் கிடைக்கும் பெரும் பயனை அவர் நன்கு அறிந்துகொண்டார்.

காவிரிப்பூம்பட்டினத்தைப் பார்த்துவிட்டு, கழுமலம் (சீகாழி), உறையூர் முதலிய வேறு பல ஊர்களைப் பார்த்தார். திருவரங்கத்துக்குச் சென்று அங்குள்ள திருமாலையைத் தரிசித்துக் கொண்டார்.

பிறகு பாண்டி நாட்டுக்கு வந்தார். வரும் வழியில் பல காடுகள் இருந்தன. அந்தக் காடுகளில் வேடர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் கொற்றவை என்னும் துர்க்கைக்குப் பூசை போட்டு ஆடிப் பாடி வழிபட்டார்கள். அந்தக் காட்சிகளைக் கண்ட இளங்கோவுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அப்படியே பாண்டி நாடு புகுந்து மதுரையை அடைந்தார். பாண்டியனைக் கண்டு அளவளாவினர். தமிழ்ச்-