பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நெருங்கிப் பழகினர். அவர்களுக்குள் சாத்தனார் என்பவருக்கும் இளங்கோவுக்கும் மிகநெருங்கிய நட்பு உண்டாயிற்று.

சாத்தனார் மதுரையில் தானியக்கடை வைத்திருந்தார். புலவர்களிற் பலர் தமக்குரிய தொழில்களைச் செய்துகொண்டே கவிகளைப் பாடி வந்தார்கள்; நூல்களை இயற்றி வந்தார்கள்; தமிழ்ச் சங்கத்தில் ஆராய்ச்சி செய்தார்கள். தானியக் கடை வைத்திருந்த சாத்தனாரைக் கூல வாணிகன் சாத்தனார் என்று அழைத்தார்கள். தானியத்துக்குக் கூலம் என்ற வேறு ஒரு பெயரும் உண்டு. கூல வாணிகன் என்பதற்குத் தானிய வியாபாரி என்று பொருள். ‘வாணிகத்தையும் நன்றாக நடத்திக்கொண்டு தமிழிலும் பெரிய புலவராக இருக்கிறாரே !’ என்று சாத்தனாரிடத்தில் வியப்பும் மதிப்பும் சேர அரசனின் புதல்வருக்கு உண்டாயிற்று. சாத்தனாருக்கோ, ‘பழைய அரச குலங்களில் ஒன்கிறாகிய சேர குலத்தில் தோன்றியவர் இவ்வளவு பணிவாகவும் அறிவாளியாகவும் இருக்கிறாரே!’ என்று வியப்பு எழுந்தது.

சாத்தனாரும் இளங்கோவும் நண்பர்களாயினர். “தாங்கள் வஞ்சிமா நகருக்கு வரவேண்டும். என் தந்தையார் தங்களைப் போன்ற புலவர்களைக் கண்டால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார். என் தமையனர் என்னை விடப் பன்மடங்கு அறிவாளி. அவரும் தங்களைக் காண்பதால் உவகையும் பயனும் பெறுவார்” என்று இளங்கோ இயம்ப, “அப்படியே வருகிறேன்”. என்று ஒப்புக்கொண்டார் சாத்தனர். அவர் இளங்கோவைப் பாண்டி நாட்டிற் பல இடங்களுக்கு அழைத்-