பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. துறவரசர்

பெரும் பயணமும் சிறு பயணமும் நிறைவேறிய பிறகு இளங்கோ வஞ்சிமா நகரை அடைந்தார். தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் தம் தந்தைக்கும் தமையனுக்கும் விரித்துரைத்தார். தமிழ்ப் புலவராகிய சாத்தனாரை ஒரு முறை வருவித்துச் சிறப்புச் செய்ய வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்தார்.

அவர் விருப்பப்படியே சாத்தனாரை அரசன் அழைத்துவரச் செய்தான். அவருடைய புலமையை உணர்ந்து பாராட்டிப் பரிசு அளித்தான். சாத்தனாரோடு செங்குட்டுவன் நன்றாகப் பழகினான். “அடிக்கடி இங்கே வரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். இளங்கோ, ‘இனி என் பொருட்டாக வர மறந்தாலும் என் தமையனாருக்காகவாவது வரவேண்டும்’ என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார். ‘இரண்டு பேருக்காகவும் வருவேன்; உண்மையைச் சொல்லப் போனால் எனக்காகவே வருவேன். வருவதால் எனக்குத் தானே இலாபம்?’ என்றார் சாத்தனார்.

ஒரு நாள் நெடுஞ்சேரலாதன் திரு ஓலக்கத்தில் இருந்தான்; சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான். அமைச்சர், படைத் தலைவர், நியாய சபைத் தலைவர், நகரத்திற் பெரியவர்கள், புலவர்கள் முதலிய பலர் அங்கே இருந்தார்கள். அரசனுடைய வலப் பக்கம் ஒரு சிறிய பொன் ஆதனத்தில் இளவரசன் செங்குட்டுவன் வீற்றிருந்தான். இடப் பக்கம் வேறு தனியாசனத்தில் பெருநம்பி இளங்கோ அமர்ந்திருந்தார்.