பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அவரை நோக்கினான். செங்குட்டுவன் பார்வையும் அவர்மேல் பதிந்தது. மற்றவர்களும் அவரையே பார்த்தார்கள்.

“இதோ, இந்தச் சோதிடர் சொற்களைப் பொய்யாக்கி விடுகிறேன் நான். எனக்கா இந்த அரசாட்சி கிடைக்கும் என்று சொன்னார்? நான் இதோ இந்தக் கணத்திலே துறவுபூண்பதாகச் சபதம் செய்கிறேன். என் தமையனார் நெஞ்சில் ஐயம் இருந்தால் இப்போதே ஒழியட்டும். நான் இன்றுமுதல் துறவி. எனக்கும் இந்த அரசுரிமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”

“என்ன இது! என்ன இது!” என்று யாவரும் திணறிக்கொண்டு கேட்டார்கள். சோதிடர்கூட ஒன்றும் தெரியாமல் விழித்தார்.

இளங்கோ மேலும் பேசலானார்; “இந்தச் சேர நாட்டரசு எனக்குப் பெரிதன்று. முடிவே இல்லாத பேரின்ப அரசு எனக்குக் கிடைக்கும்படி நான் விரதம் இருந்து நோற்பேன். முடிஏற்ற பிற அரசர்போல வாழாமல் முடி எடுத்த துறவரசனாக வாழ்வேன்” என்றார்.

அரசன் மயக்கத்திலிருந்து விழித்தவன்போல, “என்ன அப்பா இது? நீ எதற்காகத் துறவு பூண வேண்டும்? யாரோ பைத்தியக்காரச் சோதிடர் வாய்க்கு வந்ததைச் சொன்னதற்காக நீ இப்படிச் செய்யலாமா? செங்குட்டுவன் உன் அருங்குணத்தை அறியாதவனா?” என்று கேட்டான்.

“நான் செய்வது பிழையாக இருந்தால் பொறுத்தருள வேண்டும். நான் துறவடைந்து ஞானம்