பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. இரு பெரும் புலவர்கள்

வஞ்சிமா நகருக்கு மேற்கே கடல். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பெரிய கோட்டை வாயில்கள் இருந்தன. கிழக்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருந்தது. அதைக் குணவாயிற் கோட்டம் என்று யாவரும் சொல்வார்கள். பெருநம்பி இளங்கோவாக இருந்தவர் தம் பட்டத்தையும் அரண்மனை வாழ்வையும் உதறிவிட்டு அந்தக் கோட்டத்தில் துறவியாக இருந்தார். அரண்மனையை விட்டு வெளியேறினவர் வஞ்சி நகரை விட்டுச் சென்று யாரோ ஒரு துறவியிடம் துறவு பெற்றுச் சில காலம் அவருடன் இருந்தார். தம்முடைய அழகிய தலைமுடியை மழித்துவிட்டார். துறவிக்குரிய எளிய உணவை உண்டார்; எளிய உடையை உடுத்தார். உறக்கத்தையும் குறைத்தார். அடிக்கடி தியானத்தில் இருந்தார். தம்முடைய குருநாதருக்குத் தொண்டு செய்தார்.

அரண்மனையில் பலர் ஏவல் செய்ய, இனிதாக வளர்ந்து வந்த அந்த அரச குமரர். இப்போது தம் குருவுக்கு ஏவல் செய்தார். அறுசுவை உண்டி வேண்டும் போதெல்லாம் உண்டவர், இப்போது ஒரு வேளை சுருங்கிய உணவை உண்டார். நன்றாகக் கொழுகொழு வென்று வளர்ந்திருந்த அவர் திருமேனி மெலிந்தது. ஆனால் அதில் தவத்தேசு மிகுந்தது. அவர் முகத்தில் ஒளி பரவியது. கண்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. அவரை யார் கண்டாலும், “இவர் உண்மைத் துறவி” என்ற எண்ணம் உண்டாகும்படி இருந்தது அவர் தோற்றம்.