பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

சிலகாலம் குருநாதரோடு இருந்த இளங்கோத் துறவி இப்போது குணவாயிற் கோட்டத்துக்கு வந்து விட்டார். முனிவராகிவிட்ட அவரை மக்கள் யாவரும் இளங்கோ அடிகள் என்று அழைத்தார்கள். வஞ்சிமா நகரிலுள்ளவர்களும் மற்ற ஊர்க்காரர்களும் அவரை வந்து கண்டு அவருடைய நல்லுரைகளைக் கேட்டுச் செல்வார்கள்.

முதுமையினாலும் தன் இளைய புதல்வர் துறவு பெற்றதைக் கண்டு மனம் உடைந்து போனமையாலும் நெடுஞ்சேரலாதன் நெடுநாட்கள் வாழவில்லை. அந்த ஒரு திறத்தில்மட்டும் சோதிடர் சொன்னது பலித்தது. நெடுஞ்சேரலாதன் உலக வாழ்வை நீத்தான். செங்குட்டுவன் அரியணை ஏறினான்

செங்குட்டுவன் சிவபக்தன். வீரமும் அறிவும் நிரம்பியவன். தன் ஆட்சியில் எல்லாச் சமயத்தினரையும் வேறுபாடின்றி அவரவர்களுக்குரிய உதவிகளைச் செய்துவந்தான். இளங்கோவடிகளுக்கு வேண்டியவற்றை அவர் அறியாமலே கிடைக்கும்படி செய்தான். அடிக்கடி அவரைக் கண்டு பேசினான். அவர் பிராயத்தால் இளையவரானாலும் நிலையால் உயர்ந்தவராதலின் செங்குட்டுவன் அவரிடம் பணிவாக நடந்து கொண்டான்.

இளங்கோவடிகள் பல மாணாக்கர்களுக்கு ஞான நூல்களையும் தமிழ் நூல்களையும் பாடம் சொல்லி வந்தார். சில சமயங்களில் வேறு ஊர்களுக்குப் போய் வந்தார்.

மதுரையில் இருந்த புலவர் சாத்தனார் செங்குட்டுவன் அரசனான பிறகு அடிக்கடி வஞ்சிமாநகரம் வந்து