பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அவனுடன் அளவளாவினர். தம்முடைய முதல் நண்பராகிய இளங்கோவடிகளைக் கண்டு பணிந்து தமிழ் இலக்கியம்பற்றிப் பேசி இன்புற்றார். புலமை மிக்க இருவரும் பல பல பேசிப் பொழுது போக்கினார்கள். சாத்தனார் மதுரையில் நிகழும் சிறப்புக்களை எடுத்துச் சொல்வார். பழைய நூல்களிலுள்ள நயங்களைச் சொல்வார். தாம் பாடிய கவிகளைச் சொல்லிக் காட்டுவார். இளங்கோவடிகளும் தமிழ் இலக்கியத்தில் உள்ள அழகை எடுத்துச் சொல்வார். இவ்வாறு இருவரும் தமிழ் இன்பக் கடலில் அமிழ்ந்தனர்.

இளங்கோவடிகள் துறவியாகிவிட்டாலும் தமிழை விடவில்லை; தமிழ்ப் புலவரின் நட்பைத் துறக்கவில்லை. சாத்தனாருக்கும் அவருக்கும் இடையே இருந்த நட்பானது பின்னும் இறுகியது. அதனால் சாத்தனார் வஞ்சிமா நகருக்கு அடிக்கடி வரத் தலைப்பட்டார். என்றாவது அவர் மதுரையில் நினைத்தால் வஞ்சிமா நகருக்குப் பயணம் கட்டவேண்டியதுதான். இளங்கோவடிகளும் எப்போதாவது சாத்தினாரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணினால் உடனே திருமுகம் போக்குவார்; அதனைக் கண்டவுடனே சிறிதும் தாமதம் இன்றி மதுரைப் புலவரும் புறப்பட்டு வந்து சேருவார்.

சிறந்த புலவர் ஒருவர் மற்றொரு சிறந்த புலவரோடு சேர்ந்து பழகும் பழக்கத்தினால் கிடைக்கும் இன்பத்துக்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு எந்த இன்பமும் இல்லை. ஒருவருக்கொருவர் அன்பு செய்து மனம் கலந்து பழகுவார்களானால், அவர்கள் இந்த உலகத்திலே சொர்க்க இன்பத்தைப் பெற்றுவிடு