பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

கிறர்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம். மற்றொரு சிறப்பும் உண்டு. இப்படி இரண்டு புலவர்கள் கூடிப் பேசும்போது அருகில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் இலாபம் கணக்கில் அடங்காதது. பல நாட்கள் படித்தும் தெரிந்துகொள்ள முடியாத பல சுவையான பொருள்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இளங்கோவடிகளிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்களுக்கு இந்தச் சுவை நன்றாகத் தெரியவந்தது. சாத்தனார் வந்து விட்டாரென்றால் அவர்களுக்குக் கட்டுக்கடங்காத ஊக்கமும் உவகையும் உண்டாகி விடும். அவரும் இளங்கோவடிகளும் கூடிப் பேசும் பேச்சிலே எத்தனை மணிகள் உதிரும்! எத்தனை தேன் துளிகள் சொட்டும் அவற்றையெல்லாம் அருகிலிருந்து நுகர்கிறவர்கள் அல்லவா அவர்கள்?

ஒரு நாள் சாத்தனார் வஞ்சிமாநகருக்கு வந்திருந்தார். குணவாயிற் கோட்டம் வந்து இளங்கோவடிகளுடன் அளவளாவினர். தாம் புதியனவாக இயற்றிய கவிகளைச் சொல்லிக் காட்டினார். இளங்கோவடிகளும் தம்முடைய பாடல்களைச் சொன்னார். சாத்தனார், “ஏதாவது பெரிய நூலாக ஒன்றை இயற்ற வேண்டுமென்று எனக்கு ஆர்வம் உண்டாகிறது. தொடர்ந்த வரலாறாக இருந்தால் சுவையாக இருக்கும். எதைப்பற்றி எழுதலாம் என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் புலனாகவில்லை” என்றார்.

“செய்ய வேண்டியதுதான். தமிழ் நாட்டுக்கு நல்வினைப் பேறு இருந்தால் உங்கள் பெரு நூல் அதற்குக் கிடைக்கும்” என்று இளங்கோவடிகள் அவர் கருத்துக்கு ஒத்துத் தம் கருத்தைக் கூறினார்.