பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. மலை வளம்

சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் இருந்தான். அவன் அரசனானபிறகு சில போர்களைச் செய்து வெற்றி பெற்றான். மேல் கடலில் சேரநாட்டிற்குச் சிறிது தூரத்தில் ஒரு பெருந் தீவில் கடம்பர் என்ற மன்னர்கள் ஆண்டு வந்தனர். தம்முடைய குலத்துக்குரியதாக ஒரு மரத்தைக் காப்பாற்றி வருவது பழங்கால வழக்கம். அந்த மரத்தைக் காவல் மரம் என்பார்கள். அதை யாரும் வெட்டாத வகையில் காத்து வருவார்கள். கடம்பர்களின் காவல் மரம் கடம்பு. அதனால்தான் அவர்கள் அப்பெயரைப் பெற்றார்கள்.

இந்தக் கடம்பர்களைச் சார்ந்தவர்கள் அடிக்கடி சேர நாட்டுக்கு ஓடங்களில் வந்து கொள்ளையிட்டார்கள். மக்களைத் துன்புறுத்தினர்கள். சில சமயங்களில் மரக்கலங்களிலும் வந்து புகுந்து கொள்ளையிட்டார்கள். அவர்கள் இருக்கும் தீவுக்குப் படையுடன் சென்று போரிடுவது எளிதாக இல்லை. இடையிலே உள்ள கடல் கொந்தளிப்புடையதாக இருந்தது. அடிக்கடி கடம்பர்கள் கொடுத்துவந்த தொல்லையைச் செங்குட்டுவன் தெரிந்து கொண்டான். எப்படியாவது அவர்களைத் தொலைக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். கொந்தளிப்பான மேல் கடலில் போவதற்கு ஏற்ற வலிமையுள்ள கப்பல்களைக் கட்டச் செய்தான்.

முதலில் ஒற்றர்களை வலையர்களைப் போலக் கட்டு மரங்களில் அனுப்பிக் கடம்பர்களுடைய படைப் பலத்தை அறிந்து வரச் செய்தான். அவர்களுடைய