பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

செய்தான். அது பெரும் போராக அவனுக்குத் தோன்றவில்லை. தன் படைத் தலைவன் ஒருவனை அனுப்பியிருந்தாலே போதும் என்று எண்ணினான். எளிதிலே கடம்பர்களை வென்றான். அவர்களுடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி அதை வஞ்சிமாநகரத்துக்கு எடுத்து வந்தான். அதிலிருந்து ஒரு முரசு செய்யும்படி ஏவினான். கடம்ப மரத்தினால் அமைந்த அந்த முரசு, முழங்கும் போதெல்லாம் கடம்பர்களை வென்றவன் செங்குட்டுவன் என்பதை உணர்த்தியது.

இது மட்டும் அன்று, கடம்பர்களை வென்றதை விடக் கடலின் உறுமலுக்கு அஞ்சாமல் ஏற்ற வகையில் கப்பலைக் கட்டிச் சென்றது பெரிய வீரமாகத் தோன்றியது மக்களுக்கு. அதனால் யாவரும் அந்தச் செயலைப் பாராட்டினார்கள். கடம்பர்களை வென்றதை விடக் கடலைப் புறங்கண்ட பெருமையே பெருமை என்றார்கள். இதனால், “கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்” என்ற சிறப்புப் பெயர் அச்சேரமன்னனுக்கு அமைந்தது. பிறக்கு என்பது முதுகு என்னும் பொருள் உடைய சொல். “கடலை முதுகு காட்டச் செய்து ஓட்டிய செங்குட்டுவன்” என்பது அந்தப் பட்டத்துக்குரிய பொருள்.

படைகளை ஒழுங்குபடுத்திக் கப்பல்களைக் கட்டச் செய்து கடம்பர்களின்மேல் படையெடுத்துச் சென்று போரிட்டு வென்ற செங்குட்டுவன், சிறிது அமைதியாக இருக்க எண்ணினான். போர்க்களத்தில் பகைவர்களின் பிணங்களைக் கண்ட அவன், அழகிய காட்சி எதையாவது காணவேண்டுமென்று விரும்பினான்.